பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156. கொத்தடிமைகள்

டைக்கலத்துக்கும், அவன் குடும்பத்திற்கும் ஊர் பேர் தெரியாத, மொழி புரியாத அந்தப் பிரதேசத்தில் அகர்வால்தான் அடைக்கலம் அளித்திருந்தான். நன்றாக உழைக்கக் கூடிய கணவன் மனைவி. பத்து வயதுச் சிறுவன் ஆகிய மூவரும் சேர்ந்து மாதம் ஐம்பது ரூபாய்க்கு முப்பது நாளும் கல்லுடைப்பது என்பது அநியாயம்தான்.

எந்தச் சலுகையும், எந்த வசதியும், தொழிலாளர் நலச்சட்டங்களின் எந்தப் பிரிவும் அணுக முடியாத காட்டுப் பிரதேசம் அது. விடிந்ததிலிருந்து இருட்டுகிற வரை மாதம் முப்பது நாளும் உழைத்துத்தான் ஆக வேண்டும். நாள் ஒன்றிற்குப் பன்னிரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் வியர்வை சிந்தி உழைப்பதைத் தவிர்க்க முடியாது. நேரக் கட்டுப்பாடு ஏதும் கிடையாது.

நாட்டில் விலைவாசி எவ்வளவுதான் ஏறினாலும், பணத்தின் மதிப்பு எவ்வளவுதான் குறைந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு வந்ததிலிருந்து அந்தக் குடும்பத்தின் ஒட்டு மொத்தமான மாதச் சம்பளம் ஐம்பது ரூபாயைத் தாண்டியதே இல்லை.

இவர்கள் குடும்பம் மட்டுமில்லை. ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும், பீகாரிலிருந்தும் குடியேறியிருந்த வேறு சில குடும்பங்களும் இப்படித்தான் ஆண்டுக்கணக்கில் கைக்கும், வாய்க்கும் போதாத குறைந்த வருமானத்துக்காக மாண்டு, மாண்டு கல்லுடைத்துக் கொண்டிருந்தன.

எழுதப் படிக்கத் தெரியாத இந்தக் கைநாட்டுப் பேர்வழிகள் தங்களுக்காகவும், தங்களுடைய வளர்ச்சிகள், மறுவாழ்வுகளுக்காகவும் போடப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் அறிந்திருக்க நியாயமில்லை.

தாங்கள் யாருக்கோ கொத்தடிமைகளாக இருக்கிறோம் என்பது தெரியாமலே கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து அப்படி அடிமைகளாக இருப்பது அவர்களுக்குப் புரிந்ததுமில்லை, உறுத்தியதுமில்லை, உறைத்ததுமில்லை.

அடிமையாயிருக்கிறோம் என்பதே புரியாதவனுக்குச் சுதந்திரமாயிருக்க வேண்டியதன் அவசியம் புரியாது. அடிமைத்தனத்தின் சிரமங்களும், அவலங்களும் யாருக்குப் புரியுமோ, அவர்களுக்குத்தான் சுதந்திரத்தின் செளகரியங்களும், சுகங்களும் கூடப் புரிய முடியும்.

அடைக்கலத்துக்கு அவன் அடிமையாயிருப்பதும் புரிந்ததில்லை, சுதந்திரமாயிருக்க வேண்டும் என்பதும் தோன்றியதில்லை. சொல்லப் போனால் சுதந்திரமா