பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160. தேய்மானம்

முத்துரங்கத்தை நான் முதன் முதலாகச் சந்தித்தது பாண்டிபஜாரில் ஒரு வெற்றிலை பாக்குக் கடைஅருகில். ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து ஒரு மாலைத் தினசரி வாங்கிக் கொண்டு, நான் கடைக்காரனிடம் பாக்கிச் சில்லறைக்காகக் காத்து நின்ற போது, “வணக்கம், சார். எப்படியிருக்கீங்க? இப்ப ‘மணிமலர்’ல வர தொடர்கதை ரொம்ப நல்லாயிருக்கு சார்” என்று புன்முறுவலோடு அருகே வந்தார், அந்த நடுத்தர வயது மனிதர். பாகவதர் கிராப். படர்ந்த முகம். நெற்றியில் குங்குமப் பொட்டு.

எனக்கு முதலில் குழப்பம். அப்புறம் தயக்கம். “வணக்கம்! நீங்க யார்னு தெரியலியே? ‘மணிமலர்’ல நான் இப்போ தொடர்கதை எதுவும் எழுதலியே!”

“நீங்க எதிலே எழுதினாலும், உங்க கதைகள்னா எனக்கு உசிர் சார்”

“அது சரி! நீங்க யார்னே சொல்லலியே?”

“நடிகமணி முத்துரங்கம்னு கேள்விப்பட்டிருப்பீங்களே? சின்ன வயசிலே பாஸ்கர தாஸ் பால விநோத சபா நாடகக் கம்பெனியிலே இருந்தேன். அப்புறம் சினிமாத் துறைக்கு வந்து கே.கே.வி. நிறுவனப் படங்களிலே சில்லறை வேஷங்களைப் பிரமாதமாப் பண்ணினேன்.”

“அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி”

“இப்பக் கூட ஏழரை மணிக்குத் தரணி ஸ்டூடியோவில படப்பிடிப்பு இருக்கு. நான் போயாகணும்”

மனிதர் விடாமல் கூடவே நடக்கிறார். மணிபர்சை மூடுகிறேன் நான்.

“அடடே மணியாச்சே?”

“அப்போ நாம இன்னொரு நாள் பார்க்கலாமா?”

“ஒரு சின்ன உதவி. ஒரு கலைஞனோட கஷ்டத்தை இன்னொரு கலைஞன் தான் புரிஞ்சிக்க முடியும்/”

“சொல்லுங்கோ.”

“நான் இப்போ வீட்டிலே இருந்தேன்னா, பட நிறுவன வண்டி வந்து அழைச்சிண்டு போகும். இப்போ இங்கே இருக்கிறதாலே என் செலவில, நான்தான் போயாகணும். நம்மாலே படப்பிடிப்பு நின்னுடப்படாது.”

“நியாயந்தான்.”