பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162. அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான்

னகசபையிடமிருந்து அந்த விமானத் தபால் கிடைத்த போது கிழவர் வேதகிரிக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. அவர்கள் தன்னைப் பார்க்கக் கிராமத்துக்கு வரப் போவதில்லை என்ற விவரத்தைக் கடிதத்தில் படித்த போது, கூடவே துயரமாகவும் இருந்தது. மகனையும், தான் இதுவரை பார்க்காத மருமகளையும், பேரனையும் பார்க்க வேண்டுமானால், சென்னைக்குப் புறப்பட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் புரிந்தது. அமெரிக்காவிலிருந்து அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள் என்று கடிதம் சொல்லியது.

வெறும் தனிக் காட்டு மரமாக - ஒற்றைக் கிழட்டு மரமாகப் பல ஆண்டுகளைக் கிராமத்தில் கழித்த துயரங்கள், தனிமை வேதனைகள் எல்லாம் தீர மகனையும், மருமகளையும், பேரனையும் பார்க்கப் போகிறோம் என்று எண்ணிய போதே உள்ளத்தில் பற்றும், பாசமும், உறவும் சிலிர்த்துப் பொங்கின.

தாயில்லாப் பிள்ளையாக மகனை வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்து, ஒரு ‘ஸ்காலர்ஷிப்’ கிடைத்து அவனை அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்கு அனுப்பிய நாட்கள் நினைவு வந்தன. பின்பு, அவன் அங்கேயே தன்னைப் போலப் படிக்க வந்திருந்த ஒர் இலங்கைத் தமிழ்ப் பெண்ணைக் காதலித்ததும், மணந்து கொண்டதும், அமெரிக்காவிலேயே வசதியான வேலை கிடைத்து இருவரும் அங்கேயே தங்கி விட்டதும், பேரன் பிறந்ததும், கடிதங்கள் மூலமே அவர் அறிந்த செய்திகள்.

“இங்கிருந்தே நீங்கள் வந்து, திரும்ப வசதியாக ஒரு விமான டிக்கெட் எடுத்து அனுப்புகிறேன், வருகிறீர்களா? என்று மகன் கேட்ட போது தம் வயது-தள்ளாமையை நினைத்து, ‘நீங்கள் எப்போதாவது விடுமுறையில் வரும் போது பார்த்துக் கொள்கிறேன். டிக்கெட் எடுத்து அனுப்ப வேண்டாம்’ என்று பதில் எழுதி விட்டார் கிழவர் வேதகிரி.

கல்யாணப் புகைப்படம், பேரனின் புகைப்படம் என்று அடுத்தடுத்து மகன் விமானத் தபாலில் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்துப் பார்த்தே பூரித்துப் போனார் அவர். ஆற்றிற்குக் குளிக்கப் போகும் போதோ, மாலையில் உலாவச் செல்லும் போதோ தம் வயதுக் கிழவர்கள் இடுப்பில் பேரனுடனோ, பேத்தியுடனோ எதிர்ப்படும் போது இவரது மனம் குறுகுறுக்கும். எங்கோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தம் பேரனை நினைத்துக் கொள்வார். ‘பையனுக்கு உங்கள் பெயரைத்தான் வைத்திருக்கிறேன். வீட்டில் செல்லமாகக் குமார் என்று கூப்பிடுகிறோம். பள்ளியில் கே.வி.கிரி என்று பெயர் கொடுத்தாயிற்று' - என்று