உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165. ஒரு சர்வதேசக் கருத்தரங்கு

கரின் மிகவும் செல்வாக்கு நிறைந்த ஸ்தாபனமாகிய சமூக இலக்கிய சேவா சங்கத்தின் ஜெனரல் பாடி கூடிய போது, யாரும் எதிர்பாராத விதமாக அப்படி ஒரு சர்ச்சை அங்கே கிளம்பியது. எல்லோரும் பயந்தே போனார்கள்.

“உங்கள் சங்கம் மேல் மட்டத்தையும், உயர் வர்க்கத்தையும் சேர்ந்த இலக்கிய கர்த்தாக்களையே கொண்டாடுகிறது. அடித்தளத்து வர்க்கத்தையும், தாழ்த்தப்பட்ட பிரிவினரையும் கண்டு கொள்வதே இல்லை.”

தலித் இயக்கத்தில் ஈடுபாடுள்ள ஒருவர் இந்தக் குற்றச்சாட்டைக் கிளப்பினார். கூடவே ஒரு யோசனையையும் தெரிவித்தார்.

“நூறு ஆண்டுகளுக்கு முன் செருப்புத் தைக்கும் தொழிலாளியாகப் பிறந்து, மகத்தான கவிதைகளை இயற்றிவிட்டு மறைந்த, குசேல தேவநாயனார் என்பவருடைய கவிதைகளைப் பற்றிய விழாவையும், நூற்றாண்டு விழாவையும் கொண்டாடிக் கருத்தரங்கு ஒன்றையும் நடத்த வேண்டும் - அக்கருத்தரங்கிற்கு இப்போது அக்கவிஞரின் வம்சாவளியினராயிருக்கும் கொள்ளுப் பேரனை அழைத்துக் கெளரவிக்க வேண்டும்.”

எப்படியாவது எதிர்ப்புக் குரலை அடக்கக் கருதிய பொதுக் குழுவினர், உடனே அதைச் செய்ய ஒப்புக் கொண்டார்கள்.

“வறுமைக் கோட்டுக்குக் கீழே கல்வி ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமுக ரீதியாகவும் பிற்பட்ட சமூகம் ஒன்றில் தோன்றிய சித்த புருஷரும், கவிஞரும் ஆகிய குசேல தேவநாயனரின் நூற்றாண்டு விழாவை ஈடு இணையற்ற முறையில் கொண்டாட வேண்டும் என்று 'சமூக இலக்கிய சேவா சங்கம் ஒரு மனமாக முடிவு, செய்கிறது” என்று தீர்மானத்தின் டிராஃப்ட்ரெஸல்யூஷனைப் படித்தார்.

உடனே கமிட்டியிலிருந்த ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர், “மெக்ஸிகோவில் தற்போது வாழும் ஸாவ்லோ காப்டா என்ற கவிஞர் நோபல் பரிசு பெற்ற புகழுக்குரியவர். குசேல தேவநாயனார் மாதிரியே செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து புகழ் பெற்றவர். அவரையும் இந்த நூற்றாண்டுவிழாக் கருத்தரங்கிற்கு அழைக்க வேண்டும்” என்று அதற்கு ஒரு திருத்தத்தை முன் மொழிந்தார்.

“ஆமாம்! அப்படியே செய்யலாம்” என்று வேறு பலரும் அதை உடன் வழி மொழிந்தனர்.


நா.பா. II — 36