பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167. தொண்டு நிலைமையைத் 'தூ' எனத் தள்ளி

”’வெட்டவெளியே உலகம் என்றிருப்பார்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்?’ என்று தாயுமானவர் சொன்ன மாதிரி” - குப்புசாமி காரில் உடன் வந்து கொண்டிருந்தவரிடம் ஏதோ கூறிய போது டிரைவர் குறுக்கிட்டுத் திருத்தினான்.

“அது தாயுமானவர் பாட்டு இல்லீங்க. சித்தர் பாடல் - குதம்பைச் சித்தர் எழுதினது.”

“நீ வண்டியைப் பார்த்து ஓட்டுப்பா.” குப்புசாமி அவனைக் கோபித்துக் கடிந்து கொண்டார். அதில் இரட்டைக் கோபமும், இரண்டு மடங்கு கடிந்து கொள்ளுதலும் இருந்தன. மாதச் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஒரு காரோட்டி உள்ளே அமர்ந்திருப்பவர்களின் பேச்சில் கவனம் செலுத்திக் கலந்து கொள்ளக் கூடாது என்ற கண்டிப்பும், தனக்குச் சம்பளம் கொடுக்கிற முதலாளியின் தவறுகளைத் திருத்தத் தொழிலாளிக்கு உரிமையில்லை என்ற இன்னொரு கண்டிப்பும் பிரிக்க முடியாமல் இணைந்திருந்தன. அந்தக் குரலில் கண்டிப்பை விடக் கோபமே அதிகம் இருந்தது.

கண்ணப்பன் தமிழ்ப் புலவருக்குப் படித்து விட்டு அந்தப் படிப்புக்கான வேலை கிடைக்காமல், எப்போதோ பொழுதுபோக்காகக் கற்றுக் கொண்ட ‘கார் டிரைவிங்’ ஒரு வேலையைத் தேடித் தர, அதை ஏற்றுச் செயலாற்றி வந்தான். “புலவருக்குப் படித்தேன், வேலை கிடைக்கவில்லை. ஓட்டுனராக வந்தேன்” - என்று அவன் யாரிடமும் சொல்லிக் கொள்வதில்லை. வேலைக்கு முயன்ற போது இரண்டொரு நபர்களிடத்தில் அப்படிச் சொல்லி, அதனால் கிடைக்க இருந்த வேலை கிடைக்காமல் போய்விட்டது. ‘படித்தவன் உடம்பு வணங்கி ஓடியாடி வேலை செய்ய மாட்டான்’ என்ற அபிப்பிராயம் இருந்ததுதான் காரணம். இதிலிருந்து அவன் தெரிந்து கொண்ட உண்மை புலவருக்குப் படித்திருப்பதைச் சொன்னால் கிடைக்கிற டிரைவர் வேலை கூடக் கிடைக்காமற் போய்விடும் என்பதுதான். ஆகவே, அதை யாரிடமும் கூறுவதைத் தவிர்த்தான்.

சென்னையில் கால் ஊன்றிக் கொள்ள வேண்டுமானால், ஒரு வேலை வேண்டும். வதவதவென்று எம்.ஏக்களும், பிஎச்டிகளும் மலிந்து கிடக்கிற ஊரில் வெறும் புலவர் பட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வேலைக்கு அலைவதில் பல சிரமங்கள் இருந்தன. படித்துப் பட்டம் பெற்று விட்டு டிரைவர் வேலையா பார்ப்பது என்று கண்ணப்பன் ஆரம்பத்தில் கூசிக் குறுகினாலும், மீன மேஷம் பார்க்காமல் கிடைத்த வேலையைத் துணிந்து ஒப்புக் கொண்டான். பெரும்பாலும் மாலை நேரங்களில் - இரவில் தெரிந்த இலக்கிய நண்பர்கள் மூலம் பட்டிமன்றம், கவியரங்கங்களுக்கு ஒப்புக்