உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170. சமர்ப்பணம்

விஞர் பிரேமதாசன் ரொம்பவும் ‘சென்ஸிடிவ்’, ‘டச்சி’, ‘மூடி மேன்’ - என்றெல்லாம் பல விதமாக அவரைப் பற்றி அபிப்ராயங்கள். அன்பிற்காகவும், பிரியத்திற்காகவும் எதையும் செய்யக் கூடியவர் என்றும், அவரை நன்றாக அறிந்தவர்கள் கூறினார்கள். வேறு சிலர் ‘முசுடு’ என்றனர். காலத்தின் கண்ணாடியாகவும் புது யுகத்து இலக்கியப் பிரதிநிதியாகவும் விளங்கிய பிரேமதாசன் நாட்டு மக்களிடையே புகழ், பிராபல்யம், மரியாதை அனைத்தையும் ஒரு சேரப் பெற்றிருந்தார். அவரோடு நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளப் பலர் தவித்தார்கள். ஓர் ஆட்டோகிராப் வாங்க மணிக் கணக்கில் காத்துக் கிடந்தார்கள். நேரில் கண்டு இரண்டு வார்த்தை பேசப் பலர் ஏங்கினார்கள்.

அந்தக் கோடையில் ஒரு பெரிய காவியம் எழுதுவதற்காகப் பிரேமதாசன் கூனூரில் ஒரு மாசம் போய்த் தங்கப் போவதாகத் தகவல் பரவியது. பத்திரிகைகளிலும் செய்தி வநதது.

அவ்வப்போது பிரேமதாசன் திரைப்படங்களுக்கும் பாடல்கள் இயற்றி வந்ததால், இந்தக் கூனூர் டிரிப் பற்றிய சேதி சினிமா வட்டாரத்திலும் கிசுகிசுவாகப் பரவியது. வியாபாரம், திரைப்படத் தயாரிப்பு, தியேட்டர்கள், எஸ்டேட், தொழில், கனரக இண்டஸ்ட்ரிஸ், மணி லெண்டிங் ஆகிய அனைத்திலும் ஈடுபட்டிருந்த ‘மிட்டாபுரம் ஃபேமிலி’ என்ற பணக்காரக் குடும்பம் கவிஞர் பிரேமதாசன் கூனூர் செல்லும் திட்டத்தைக் கேள்விப்பட்டுத் தங்கள் எஸ்டேட் பங்களாவிலேயே அவர் தங்கி எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டது. மிட்டாபுரம் குடும்பத்திற்கு விருந்தோம்பலிலும், உபசரிப்பதிலும் அப்படி ஒரு வெறி. யாரை உபசரிப்பது, எதற்காக உபசரிப்பது என்பதில் கூட அக்கறை இருந்தது என்று சொல்லி விட முடியாது. உபசரிக்க வேண்டும், பேர் வாங்க வேண்டும், அவ்வளவுதான்.

நகருக்கு வரும் கிரிக்கெட் வீரர் முதல், கிருமி நாசினிகளைப் பற்றிய நிபுணர் வரை, நாட்டியக் கலை மணி முதல் நாதஸ்வர வித்துவான் வரை யாரையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. ‘பப்ளிக் ரிலேஷன்ஸுக்காக’ இதைப் பிரமாதமாகச் செய்து வந்தார்கள் அந்தக் குடும்பத்தினர். நாலு பேர் தங்களைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டும் என்பதே அவர்கள் ஆசை.

எங்கோ லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலிருந்து வரும், வாயில் பெயர் நுழையாத ஒரு குத்துச் சண்டை வீரரானாலும், ஜிம்பாப்வேயிலிருந்து வரும் ஒரு கறுப்புப் பாடகரானாலும், மிட்டாபுரம் ‘கெஸ்ட் ஹவுஸில்’ தான் பார்க்கலாம்.