பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171. பிள்ளைப் பூச்சிகள்

சுற்றி இருந்தவர்கள் அவளை இலட்சியம் செய்ததாகவே தோன்றவில்லை. அங்கிருந்த மேஜை, நாற்காலி, சுவர், தரை எல்லாவற்றையும் போல அவளையும் ஒரு ஜடப் பொருளாகவே நினைத்து மறந்து விட்ட மாதிரி இருந்தது. அவளுக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு, மூளை உண்டு, கண்களும் பார்வையும் உண்டு என்பதை அவர்கள் ஏனோ மறந்துதான் போயிருந்தார்கள்.

எல்லாருடைய அலட்சியத்துக்குக்கும் முக்கியமான காரணம் அவளுக்காகத் தட்டிக் கேட்பவர் யாருமில்லை என்பதுதான். அவள் ஏறக்குறைய ஓர் அநாதை மாதிரிதான்.

மேலேயிருந்து கீழ் வரை யார், எவர் என்ற பேதா பேதமின்றி அந்த அலுவலகத்தில் அனைவருடைய ஏளனத்திற்கும், எகத்தாளத்திற்கும் இலக்கானாள் அவள்.

இடது கையில் முழங்கைக்குக் கீழே எதுவுமில்லாதபடி, ஒரு விபத்தில் உடல் ஊனமுற்றது அவளது மைனஸ் பாய்ண்ட். அதுவே ஒரு வகையில் ப்ளஸ் பாயிண்ட் ஆகியிருந்தது.

சிறு வயதிலேயே இந்த விபத்து நிகழ்ந்து விட்டதால் அவளைத் திருமணம் செய்து கொள்ள யாரும் முன் வரவில்லை. முக வசீகரம், எடுப்பான உடற்கட்டு, மூன்றாவது ஃபாரம் வரை படிப்பு எல்லாம் இருந்தும், உடல் ஊனம் அவளை மூலையில் பிடித்துத் தள்ளி விட்டது. வேலை கிடைத்தாலும் மனக்குறை குறைதான்.

சர்வதேச உடல் ஊனமுற்றோர் ஆண்டில் அவளுக்கு ஒரு யோகம் அடித்தது. அந்த ஆண்டு முழுவதும் உடல் ஊனமுற்றோருக்கு வேல வாய்ப்புக்கள் தாராளமாக அளிக்கப்பட்டன. தேடித் தேடி வேலை கொடுத்தார்கள்.

மிஸ். மாரியம்மாளுக்கும் ஒரு பெரிய சர்க்கார் அலுவலகத்தில் குடி தண்ணீர் நிரப்பி வைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் மூன்று மாடிகளிலும் இருந்த பதினெட்டுப் பானைகளிலும் தண்ணீர் தீரத் தீர நிரப்ப வேண்டும். டம்ளர்கள், பானைகளை அன்றாடம் நன்கு கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தைக் குப்பை நீக்கிச் சுத்தம் செய்து பெருக்கும் வேலையையும் அவளே கவனித்து வந்தாள். காலை பத்து மணிக்கு அலுவலகம் என்றால், எட்டரை மணிக்கே அவள் போயாக வேண்டும். அலுவலகம் தொடங்குவதற்கு முன்பே, பெருக்குதல், தண்ணீர் நிரப்புதல் போன்ற வேலைகளை முடித்தாக வேண்டும்.


நா. பா. II - 39