உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

நிதிநிலை அறிக்கை மீது

தன்னுடைய தொகுதிக்கு ஏராளமானவற்றைச் செய்துவிட்டு, இன்னும் போதாது போதாது என்று, தெருவுக்கு, வீதிக்கு, வீட்டுக் கெல்லாம் வசதிகள் வேண்டும் தன்னுடைய வீட்டுக்கு அல்ல - ஊரிலேயுள்ள வீடுகளுக்கு வசதிகள் வேண்டுமென்று சொன்னார். அதைப்போல் பலரும் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இன்றுள்ள சூழ்நிலையில், ஆறுகள், குளங்கள், ஏரிகள் இவைகளைப் பெரும்பாலும் பயன்படுத்திவிட்டோம். இருந்த போதிலும் இன்னும் பயன்படுத்த வேண்டிய நீர் நிலைகள் இருக்கின்றன. அந்த நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகமாக்கி, மழைக்காலத்திலே நீரைத் தேக்குகின்ற அந்த ஆற்றல் மிகு பணிகளை எல்லாம் நாம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், கிணறுகள், குளங்கள் போன்ற இந்தப் பாசன வசதிகளைப் பற்றித் தேர்தல் அறிக்கையிலேயும் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம். பாசன மேம்பாடு நிலைக்குழு அமைக்கப்படும் என்று சொன்னோம் எனவே அதன்படி மத்திய பொருளாதார நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும், தமிழக அரசின் முன்னாள் பொதுப்பணித் துறைச் செயலாளராகவும் இருந்த ஆர். திருமலை அவர்களுடைய தலைமையில், முன்னாள் தலைமைப் பொறியாளர்களான எஸ்.பி. நமச்சிவாயம், எஸ். பஞ்சநாதம், ஏ. மோகன கிருஷ்ணன், எஸ். நாகேஸ்வர ராவ், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் வி. ராஜகோபாலன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து செயலாற்றக்கூடிய ஒரு குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் கன்வீனராக தலைமைப் பொறியாளர் (பாசனம்), பணி புரிவார் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி)

இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தினைச் செம்மைப்படுத்தி, சீரமைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு 'இந்து அறநிலையத் துறை ஆக்கப் பணி ஆலோசனைக் குழு' அமையும் என்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டோம் அதற்கேற்ப தவத்திரு குன்றக்குடி அடிகளார், முன்னாள் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், திருவரங்கம் திருமலை