பக்கம்:நித்திலவல்லி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

141



நின்றான் அவன். எதிரே அவன் நிற்பதையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார் பெரியவர்.

அவ்வாறு நெடுநேரம் நோக்கிக் கொண்டிருந்த பின்பு கூறலானாா்;

“நீ சில நாட்களுக்கு இங்கேயே, நம்முடைய திருமோகூர்ப் பெரிய காராளரோடு தங்கியிரு! நான் மீண்டும் உன்னைக் கூப்பிட்டுச் சொல்லுகிற வரை தென்னவன் சிறுமலைக்கு நீ திரும்ப வேண்டாம்! கோநகருக்குள் போகவே கூடாது.”

“உங்கள் கட்டளைக்குப் பணிகிறேன்” என்று கூறித் தென்னவன் மாறன் தலை வணங்கி விடை பெற இருந்த போது, தொலைவில் பெரிய காராளர் பரபரப்பாக வருவது தெரிந்தது.

அங்கிருந்த மூவருமே அவருடைய எதிர்பாராத வருகையால் கவரப்பட்டார்கள். காராளர் அப்போது தன்னைத் தேடிவருகிற காரியம் புதிதாக வந்திருக்கும் தென்னவன் மாறன் முன்னிலையில் வெளிப்பட வேண்டாம் என்று கருதிய மதுராபதி வித்தகர், “மல்லா! இவனை அழைத்துக் கொண்டு நீ காராளர் திரு மாளிகைக்குப் போ! காராளர் என்னிடம் பேசிவிட்டுச் சிறிது நேரத்தில் அங்கு வந்து உங்களோடு சேர்ந்து கொள்வார்” என்று சொல்லி அவர்களிருவரையும் அப்போது அங்கிருந்து மெல்லத் தவிர்த்து அனுப்பினார்.

அப்போது மாலை மயங்கத் தொடங்கியிருந்த வேளை. மேற்கு வானம் பொன் மேகங்களாற் பொலியத் தொடங்கியிருந்தது. பெரியவரைத் தேடி வந்திருந்த காராளர் வழியில், தன் எதிரே திரும்பிக் கொண்டிருந்த மல்லனையும், தென்னவன் மாறனையும், “நீங்கள் இருவரும் சிறிது தொலைவு போவதற்குள் நான் பின்னாலேயே வந்து விடுவேன்” என்ற சொற்களுடன் சந்தித்து விடை கொடுத்து அனுப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/142&oldid=945316" இலிருந்து மீள்விக்கப்பட்டது