பக்கம்:நித்திலவல்லி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

நித்திலவல்லி / முதல் பாகம்



“தேனூர் மாந்திரீகனுக்கு என்ன நேர்ந்தது? அவன் ஏன் இப்படிப் படுகாயமுற்று நிலவறை வழியே வந்து இங்கே விழுந்தான்?”- என்பதை எல்லாம் அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய நிலையில் அவன் அப்போது இல்லை. பேசக் கூடச் சக்தியற்றுச் சோர்ந்து போயிருந்தான் அவன். மேலே அவனைத் தூக்கியதும் நிலவறை மூடப்பட்டது.

‘இவ்வளவு ஆபத்தான நிலையிலும் தேனூர் மாந்திரீகன் மூங்கில் கழியில் கபாலத்தைக் கோத்து மேல் நீட்டியது ஏன்?' என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.

உடனே காயங்களுக்கு மருந்திட்டு அவனைத் தேற்றும் முயற்சிகளை அவர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டியிருந்தது. மருந்தரைப்பதற்கும், தைலம் காய்ச்சிக் கொண்டு வரவும் பறந்தாள் இரத்தினமாலை. அவளுடைய சுறுசுறுப்பு இளையநம்பிக்கு வியப்பை அளித்தது. பெண் ஓர் அழகு என்றால், அவளுக்குக் குறிப்பறியும் தன்மையும், விரைவும், சுறுசுறுப்பும் இன்னோர் அழகு. அழகுக்கு அழகு செய்வது போல், இவை இரண்டுமே இரத்தினமாலையிடம் அமைந்திருந்தன.

தவிட்டைத் துணியில் கட்டிக் கொதிக்கும் வெந்நீரில் நனைத்துச் செங்கணானின் உடலில் ஒத்தடம் கொடுத்தார்கள் அழகன் பெருமாளும் இளையநம்பியும். செங்கணான் ஏதோ நலிந்த குரலில் சொல்ல முயன்றான். அப்போதிருந்த நிலையில் அவன் பேசுவது நல்லதில்லை என்று கருதிய இளையநம்பி, ‘அமைதியாயிருக்குமாறு’ அவனுக்குச் சைகை செய்தான்.

“இப்போது நீயிருக்கும் தளர்ந்த நிலையில் எதுவும் பேசவேண்டாம். பின்னால் நாங்களே எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்" என்று அவனிடம் கூறி, அவனை அமைதியடையச் செய்தார்கள் அவர்கள். செங்கணான் முற்றிலும் எதிர்பாராதவிதமான இந்த நிலையில் வந்து சேர்ந்ததால், அன்றிரவு அவர்கள் உறக்கத்தை இழந்து அவனுக்குப் பணிவிடை செய்ய நேர்ந்தது. அந்தப் பணிவிடைகளால் அவர்களில் யாரும் சோர்வடையவில்லை.

‘இந்தப் பணி இழிந்தது. இந்தப் பணி உயர்ந்தது’ என்று பாராமல் கணிகை இரத்தினமாலை, தன் பொன்னுடலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/171&oldid=945319" இலிருந்து மீள்விக்கப்பட்டது