பக்கம்:நித்திலவல்லி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

நித்திலவல்லி / முதல் பாகம்



“அப்படியானால் யாத்திரீகர்கள் என்ன ஆனார்கள்?”

“சூழ்நிலையை உணர்ந்து, பெரும்பாலோர் கோட்டைக் கதவுகள் மூடப்படுவதற்கு முன்பாகவே, அகநகரிலிருந்து வெளியேறி விட்டார்கள்...”

“நீ ஏன் தேனூருக்குத் திரும்பினாய்? உனக்குத் தேனூரில் என்ன வேலை இப்போது?”

“கோட்டையை விட்டு வெளியேறிய நம்மவர்களைப் பிரித்துத் தனித் தனியே செல்ல விடும் பொறுப்பு எனக்கு இருந்தது. திட்டமிட்டபடி அகநகரில் எதுவும் செய்ய முடியவில்லை என்றாகிய பின்பும், வெளியேறிவிட்ட யாத்திரீகர்களுக்குக் குறிப்பாக மேலே என்ன என்ன செய்யவேண்டுமென்று நெறி கூறவும், செயல் காட்டவும் வேண்டாமா?”

“திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்பது மோகூருக்குத் தெரியுமா செங்கணான்?”

“ஒற்றர்கள் இருவர் அகப்பட்டுக் கொண்டதனால், கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டதையும், யாத்திரீகர்கள் வெளியேற்றப்பட்டதையும் அந்துவன் மோகூருக்கு கூறியனுப்பியிருக்க வேண்டும். ‘நினைத்தபடி எதுவும் நடக்க முடியாது’ என்பதைப் பெரியவரும், காராளரும் இதிலிருந்தே அறிந்து கொள்ள முடியும்தானே?”

இந்தச் சமயத்தில் மஞ்சத்தில் படுத்திருந்த இளைய நம்பிக்கு அடக்கிக்கொள்ள இயலாத பெருந்தும்மல் ஒன்று வந்தது. அவன் தும்மினான். உடனே அவர்களுடைய உரையாடல் நின்றது. தொடர்ந்து சில கணங்கள் அவர்களுடைய மெளனம் நீடிக்கவே, இனி மேல் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்தவனாக இளையநம்பி மஞ்சத்தில் எழுந்து அமர்ந்தான்.

அவன் மனம் அப்போது மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்து போயிருந்தது. நினைவிழந்து உறங்கிய உறக்கத்தின் போது கண்ட ஒரு கனவையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. உறக்கம் கலைந்தபின் தன் நினைவோடு செவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/183&oldid=945291" இலிருந்து மீள்விக்கப்பட்டது