பக்கம்:நித்திலவல்லி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

277



“அவர்கள் ஏன் என்னிடம் சொல்லாமல் புறப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டுமேயொழிய, அதைப் பற்றி நீ என்ன அநுமானம் செய்கிறாய் என்பது எனக்குத் தெரிய வேண்டியதில்லை.”

“இது அர்த்தமற்ற கோபம்.”

“இந்த மாளிகைக்கு வந்ததிலிருந்து நான் அர்த்தம் உள்ளதாக எதைத்தான் செய்ய முடிகிறது?”

அவனுடைய இந்த வார்த்தைகளுக்கு, அவள் மறு மொழி எதுவும் கூறவில்லை. இமையாத விழிகளால் ஓரிரு கணங்கள் அவன் முகத்தையே ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்களில் அமைதியில்லை. எதையோ நினைத்து அடைந்த கோபத்தையும், பதற்றத்தையும் செலுத்துவதற்கு இலக்கு இல்லாமல், அவன் தன் மேல் செலுத்துவதை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது. 'இங்கே வந்த பின்பு அர்த்தம் உள்ளதாக எதைத்தான் செய்ய முடிகிறது?' என்று மனத்தைப் புண்படுத்துவது போன்ற சொற்களை அவன் கூறியிருந்தும், சுடச்சுட அதற்குப் பதில் சொல்லும் முனைப்பை அவள் வலிந்து அடக்கிக் கொண்டாள். ஒரு விருந்தினர் பேசும் கடுமையான வார்த்தைகளை, அதே கடுமையான வார்த்தைகளால் எதிர்த்து உரையாட நினைப்பதும் பாவம் என்பதை அவள் மறந்து விடவில்லை. இளையநம்பியோ அந்த மாளிகையில் விருந்தினன் மட்டுமில்லை. அதைவிடச் சிறப்பும், உரிமையும் உள்ளவன். அவளால் நேசிக்கப்படுகிறவன். அவளையும் நேசிக்கிறவன். நேசிக்கிற ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவே நேர்பவை கோபங்கள் அல்ல. வெறும் ஊடல்களுக்குக் கோபங்கள் என்று கடுமையான பெயரை சூட்ட அவள் விரும்பவில்லை.

அப்போது அந்த நிலையில் அவனைத் தனியே சிந்திக்க விடுகிறவள் போல் அவள் ஒன்றும் பேசாமல் மாளிகையின் உட்பக்கமாகச் சென்று விட்டாள்.

கோபத்தை எதிர் கொண்டு அவிப்பதில் பெண்கள்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த அரச தந்திரிகள் என்பதை அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/276&oldid=946396" இலிருந்து மீள்விக்கப்பட்டது