பக்கம்:நித்திலவல்லி.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்


யும், பெருமூச்சு விடுவதையும் நான் கண் விழித்த போதெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஏன் இப்படி இருக்கிறாய்? எதை நினைத்து வேதனைப்படுகிறாய்? உன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லையடீ பெண்ணே...?" என்று எதை நன்றாகவும், தெளிவாகவும் புரிந்து கொண்டிருந்தாளோ, அதை ஒரு சிறிதுமே புரிந்து கொள்ளாதவள் போல் பேசினாள் செல்வப்பூங்கோதையின் தாய். ஒரு தாய் புரிந்து கொண்டாலும், புரிந்து கொண்டிருப்பதை உடனே மகளிடம் வெளிக் காட்டிக் கொள்ளக் கூடாத மிக நுண்ணிய உணர்வைச் செல்வப்பூங்கோதையின் தாயும் அப்போது அடைந்திருந்தாள். தான் நினைப்பவை எதுவும் தாய்க்குப் புரியவில்லை என மகளும், தான் புரிந்து கொண்டவை எதுவும் மகளால் அறிந்து கொள்ளப்படவில்லை எனத் தாயும், தத்தமக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

செல்வப் பூங்கோதை மிகவும் சாதுரியமாக நடந்து கொள்கிறவளைப் போல், “அம்மா! அந்தத் திருக்கானப்பேர் இளைஞர் மீண்டும் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி, ‘அவர் இப்போது இங்கே இல்லாததைப் பற்றித் தெரியாமல், அவரைக் காணலாம் என்னும் ஆசையில் இங்கே புறப்பட்டு வந்தால் என்ன செய்வது? களப்பிரர்கள் இந்த ஊரெல்லாம் மூலைக்கு மூலை பூத பயங்கரப் படையினரை உலாவ விட்டிருப்பதும், பெரியவர் இந்த ஊரை விட்டு வெளியேறியிருப்பதும் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ?” என்று தன் அன்னையைக் கேட்டாள். மகள் தன் சொற்கள் மூலமே வகையாக மாட்டிக் கொள்வதைப் புரிந்து கொண்ட தாய் அதற்காக உள்ளுறச் சிரித்துக் கொண்டாள். அன்பும், பிரியமும் தன் மகளை எவ்வளவு பேதைமையுள்ளவளாக்கி விட்டன என்று எண்ணிப் பார்த்தாள் தாய். அன்பைப் பிடிவாதமாகச் செய்வதற்குப் பேதைமையும் ஓரளவு வேண்டும் என்றே தோன்றியது தாய்க்கு. பேதைமை அறவே இல்லாத காய்ந்த அன்பில், எந்த நெகிழ்ச்சியும் இருக்க முடியாது என்பதையும் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/345&oldid=946562" இலிருந்து மீள்விக்கப்பட்டது