பக்கம்:நித்திலவல்லி.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்


நெருங்கி விடாமல், எட்டி நிற்கச் செய்கிற வல்லாண்மை அவனுக்கு உண்டு. இப்படி ஒரு கதை கட்டி விட்டால், நீ கூறும் இதை உண்மை என்று நம்பி, நான் உன்னை இந்த இருட்சிறையிலிருந்து விடுதலை செய்வேன் என நீ நினைந்தால், அது பேதமை இதை நான் நம்பவில்லை....”

“நீங்கள் என்னை விடுதலை செய்யா விட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால், மதுராபதி வித்தகர் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது உண்மைதான்! உயிரோடு இருப்பவரை மாய்ந்து போனதாக உங்களிடம் பொய் கூறி இப்போது எனக்கு ஆகப் போவது என்ன?” என்று மேலும் முன் சொன்னதையே அவரிடம் அழகன் பெருமாள் வற்புறுத்தினான். மாவலி முத்தரையர் அவன் கூறியதை ஏற்றதாகக் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும், நம்பாமல் சிறிதும் நம்பிச் சிறிதும் மனம் குழம்பினார் அவர். நேரே போய் அவர் களப்பிர அரசனிடம் அந்தச் செய்தியைக் கூறினார். கூறிய சுவட்டோடு, தாம் இந்தச் செய்தியை நம்பவில்லை என்றும் களப்பிரக் கலியரசனிடம் தெரிவித்தார்.

கலியரசன், மதுராபதி வித்தகர் இருக்கிறாரோ, மாண்டு போய் விட்டாரோ என்று அவரிடம் விவாதிக்கவில்லை. ஆனால் பாண்டிய வம்சம் தலையெடுக்க இனி வழியில்லை என்பது போல், ஏற்கெனவே தனக்குள் இருந்த ஒரு முடிவை மேலும் நம்பினான் அவன். இந்த உறுதியான நம்பிக்கையினால், கோநகரிலும், கோட்டையின் உள்ளேயும், வெளியேயும், செய்திருந்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், படை பலப் பெருக்க ஏற்பாடுகளையும் மெல்ல மெல்லப் பிடி தளர்த்தி விட்டான். படை வீரர்களில் பெரும் பகுதியைக் கோட்டையில் வைத்திருந்த நிலையை மாற்றி, வடக்கேயும், தெற்கேயும், நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கும் அந்தப் படைகளைப் பிரித்து அனுப்பினான். மாவலி முத்தரையரை மீறியே இதைச் செய்தான் அவன். அழகன் பெருமாள் முதலியவர்களைக் காராக்கிருகத்தில் இருந்து விடுதலை செய்து விடக் கூடக் கலியரசன் சித்தமாயிருந்தான். ஆனால், அதை மட்டும் முத்தரையர் பிடிவாதமாக மறுத்ததோடு, தடுத்து நிறுத்தியும் விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/394&oldid=946611" இலிருந்து மீள்விக்கப்பட்டது