பக்கம்:நித்திலவல்லி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

45


கோட்டைக்குள் அகநகரில் போவதில்லை. அப்படிப் போனால் என்மேல் கூடக் களப்பிரர்கள் சந்தேகப்படலாம். விலகி இருந்து அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதால் தான் நான் அவர்களிடம் அடைந்திருக்கும் நம்பிக்கை நம் காரியங்களுக்குப் பயன்படுகிறது. அதையும் கெடுத்துக் கொண்டு விட்டால் ஒரேயடியாக அகநகர் விஷயங்கள் நமக்கு எதுவுமே தெரியாதபடி இருண்டு விடும். என் குடும்பத்துப் பெண்கள் இறையனார் திருக்கோவிலுக்கும், இருந்த வளமுடைய விண்ணகரத்துக்கும் புறநகரில் திருமருதமுன் துறையில் புண்ணிய நீராடவும் அடிக்கடி போய் வருவார்கள். அதனால் அவர்கள் மேல் யாருக்கும் சந்தேகம் வர முடியாது... ’’

“நியாயம்தான். தாங்கள் கூறுவதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். போகும்போது நான் எப்படி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதன்படி நடந்துகொள்வேன். அபாயங்களைத் தவிர்க்க முயலவேண்டும். நீங்கள் கவலைப்படுவதை என்னால் மறுக்க முடியவில்லை, காராளரே.”

“என் மகள் ஒர் அற்புதமான வழியைச் சொன்னாள்! அதன்படி ஒர் அபாயமும் இல்லாமல் பத்திரமாக நீங்கள் கோட்டைக்குள் போய்விட முடியும். ஆனால்...?’

“ஆனால் என்ன?... ஏன் தயங்குகிறீர்கள்?”

“திருக்கானப்பேர்ப் பாண்டிய குல விழுப்பரையரின் செல்வப் பேரரும் மதுராபதி வித்தகரின் பேரபிமானத்துக் குரியவருமாகிய தங்களிடம் அதை எப்படிச் சொல்வது என்பது தான் என் தயக்கம். பெருவீரராகிய நீங்கள் அப்படி அகநகருக்குள் போக விரும்புவீர்களா, இல்லையா என்பது தெரியாமலே எப்படி அதை நான் உங்களிடம் வெளியிடுவதென்று தான் கலங்குகிறேன்...”

“தங்களுக்குத் தயக்கமாய் இருந்தால் தங்கள் மகளிடமே அதை நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/46&oldid=715166" இலிருந்து மீள்விக்கப்பட்டது