பக்கம்:நித்திலவல்லி.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

504

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



அவர்கள் எல்லோரும் விடை பெற்றுப் புறப்பட்டார்கள். பயணத்தின் போது யாரும் யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கோநகரின் கோலாகலமான ஒலிகள் குன்றின. காட்சிகள் மறைந்தன. பாண்டியர் கோநகரும், வையையாறும் திருமருத முன்துறையும் மெல்லமெல்லச் செல்வப்பூங்கோதையின் கண் பார்வையிலிருந்து நழுவின. நீர்த்திரை கண்களை மறைத்தது. எத்துணையோ பல முறைகள் வந்து திரும்பும் போதெல்லாம், கோநகரிலிருந்து மிகமிக அருகில் இருந்த திருமோகூர், இப்போது மட்டும் பல காத தூரத்துக்கு, முடிவற்று நீண்டு வழி பெருகிக் கொண்டே போவது போல் பிரமையாயிருந்தது அவளுக்கு. இன்னும் நெடுந்தூரம், இந்த வேதனையைத் தாங்கியபடியே முடிவற்றுப் பயணம் செய்ய வேண்டும் போல் ஏதோ கனமான சுமை தன்னை அழுத்துவதை நெஞ்சில் உணர்ந்தாள் அவள். இருந்தாற் போலிருந்து இதமான மெல்லிய ஆண் குரல் ஒன்று,

“நித்திலவல்லி செல்வப்பூங் கோதாய்
கத்தும் கடலேழும் சூழ்தரு காசினியில்
சித்தம் நினைப்புச் செய்கை உள்ளளவும்
எத்தாலும் நின்னை மறப்பறியேன்...”

எனப் பின்னாலிருந்து கூவி அழைப்பது போல் தோன்றியது. ஆனால், பின்புறம் வழியைத் திரும்பிப் பார்த்த போது, அப்படித் தன்னை யாரும் அழைக்கவில்லை, அது வீண் பிரமைதான் என்று தெரிந்தது. திரும்பிய கண்களில் ஒரு கணம் மேக மண்டலங்களை எட்டுவது போல், உயர்ந்த மதுரை மாநகர்க் கோட்டையின் உச்சியில் பறக்கும் புகழ் பெற்ற பாண்டியர்களின் மீனக் கொடி தொலை தூரத்தில் மங்கலாகத் தென்பட்டது. அடுத்த கணமே சென்று கொண்டிருந்த வழி, திரும்பியவுடன் அவள் பார்வையிலிருந்து மறைந்து விட்டது.

நிறைந்தது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/502&oldid=946732" இலிருந்து மீள்விக்கப்பட்டது