பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 நினைவு அலைகள் என் நண்பர், திரு. கா.ந. தணிகைவேல் என்னோடு இண்டர்மீடியட் தேர்வு எழுதினார். தந்தை திரு. கா.ரா. நமச்சிவாயரோடு உதகைக்குச் சென்றார். ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தில், பண்டிதர் நமச்சிவாய முதலியார் உதகைமண்டலம் சென்று தங்குவார். அவரைச் சூழ்ந்து பண்டிதர்கள் குழாம் ஒன்று அங்கு இருக்கும். நமச்சிவாயருக்கு உதகையில் இரு பங்களாக்கள் இருந்தன. கோடை காலத்தில் இரண்டும் நிரம்பியிருக்கும். அத்தனை விருந்தினர்கள் வந்து தங்குவார்கள். செலவு முழுவதும் பண்டிதர் நமச்சிவாயருடையது என்று சொல்லத் தேவையில்லை. திரு. தணிகைவேல், என்னை, உதகைமண்டலத்துக்கு வந்து தங்கும்படி அழைத்துக் கடிதம் ஒன்று எழுதினார். மற்றொரு நண்பராகிய திரு. தி. அ. இராமகிருஷ்ணன் அவர்களும் உதகையிலிருந்து என்னை அங்கு வந்துபோக அழைத்திருந்தார். இரு கடிதங்களையும் என் தந்தைக்குக் காட்டினேன். போகச் சொன்னார். பத்துப் பதினைந்து நாள்களில் திரும்பி வந்துவிடும்படி ஆணையிட்டார். என்று புறப்படுவது, எப்பொழுது திரும்புவது என்பதைப் பற்றி என் அப்பா, என் மாமா சந்திரசேகரோடு கலந்து பேசினார். 'போகிறதுதான் போகிறான். ஈரோட்டு மாநாட்டையும் பார்க்கிற மாதிரி போகட்டும் ' என்று மாமா என் அப்பாவுக்கு ஆலோசனை கூறினார். # ஈரோட்டு மாநாடு எது? 1930ஆம் ஆண்டு மே திங்கள் பத்து, பதினோராம் நாள்களில் நடந்த மாநில இரண்டாவது சுயமரியாதை மாநாடு ஆகும். அந்த மாநாட்டிற்குத் திரு. எம்.ஆர். ஜெயகர் என்னும் அறிஞர் தலைமை தாங்கினார். திரு. ஆர்.கே. சண்முகம் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்தார். பெரியார் திரு. ஈ.வெ.ரா.வே உயிர்நாடி. அம் மாநாட்டையொட்டி மாதர் மாநாடு, திருமதி. டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் ஏற்பாடு ஆயிற்று. சுயமரியாதை வாலிபர் மாநாடு நாகர்கோவில் திரு. சிதம்பரம் பி.ஏ.பி.எல். அவர்கள் தலைமையில் நடந்தது. மதுவிலக்கு மாநாடும் நடந்தது. அதற்குத் தலைவர், சிவகங்கை வழக்கறிஞர் இராமச்சந்திரன் சேர்வை ஆவார். அவர் இராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரசாரக் குழுவின் தலைவராக இருந்தார்; முதிர்ந்த சுயமரியாதைக்காரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/362&oldid=787203" இலிருந்து மீள்விக்கப்பட்டது