பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 நினைவு அலைகள் தமிழ் தெரிந்த ஆங்கிலேயர்களைப் போல இவர்கள் தங்களுக்குப் பட்டம் சூட்டிக்கொண்டது, தங்களைத் தமிழ்ப் பொதுமக்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்வதாகத் தோற்றமளித்தது. பிற மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழாக்கம் செய்யவும், பல துறைகளில் புதுத் தமிழ் நூல்களை எழுதி வெளியிடவும், அம் மாநாட்டில் திட்டம் தீட்டப் போவதாக அறிவித்திருந்தனர். அதற்கான பொறுப்பு முழுவதையும் தாங்கள் குறிப்பிடும் சிறு குழுவிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். செலவுக்கான முழுப் பணத்தையும் தங்களிடம் கொடுக்குமாறு அரசை வலியுறுத்தி வேண்டிக் கொள்வது, அவர்களுடைய நோக்கம். அக்குழுவில், பெரிய மனிதர்கள், பலர்- பெரும்பாலும் பார்ப் பனர்களே - இடம் பெற்றிருப்பதாகவும், பொதுமக்களிடம் தொடர் புடைய தமிழ் அறிஞர்கள் எவரும் இல்லை என்றும் குமுறல் எழுந்தது. அம்மாநாட்டிற்கு நான் ஒரு பிரதிநிதியாகச் சென்றேன். பச்சையப்பன் மண்டபம் நிறைந்து வழிந்தது. தன்மான இயக்கத்தைச் சேர்ந்த பலர் அங்கு இருப்பதைக் கண்டேன். திரு சா.குருசாமி, திரு பூவாளுர் பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார் போன்ற பலர் இருந்தார்கள். கடவுள் வாழ்த்து பாடப்பட்டது. அது இந்துசமய வாழ்த்து. மற்ற சமய வாழ்த்து ஏன் பாடவில்லை? தமிழ் எல்லாச் சமயத்தவர்க்கும் உரியது' என்று சிலர் முழங்கினார்கள். தொடக்கமே, கருத்து மோதலாக இருந்தது. மாநாட்டின் நடவடிக்கை நினைத்ததற்கு மாறாக நடந்தது. அம்மாநாட்டில், திரு சா. குருசாமி - பிற்காலத்தில் 'குத்துசி குருசாமி என்று புகழ்பெறப் போகிறவர் - எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆய்ந்து பரிந்துரைக்கும்படி 11 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று அம்மாநாட்டில் அமைக்கப்பட்டது. அக்குழு கூடவும் இல்லை; ஆயவும் இல்லை; ஆதரவாகவோ, எதிராகவோ முடிவு சொல்லவில்லை. பாரதி திங்கள் இதழ் ஆசிரியர் அம்மாநாட்டில், எனக்கு அடுத்து நெடிய, ஒல்லியான மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/416&oldid=787291" இலிருந்து மீள்விக்கப்பட்டது