உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கற்கை நன்றே: கற்கை நன்றே:
பிச்சை புகினும், கற்கை நன்றே.35

கல்லா ஒருவன் குல நலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே.36

நாற்பாற் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின், கீழ் இருப்பவனே.37

எக்குடிப் பிறப்பினும், யாவரே ஆயினும்,
அக் குடியில் கற்றோரை, 'மேல் வருக!' என்பர்.38

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.39

அச்சம் உள் அடக்கி, அறிவு அகத்து இல்லாக்
கொச்சை மக்களைப் பெறுதலின், அக் குடி
எச்சம் அற்று, ஏமாந்திருக்கை நன்றே.40

யானைக்கு இல்லை, தானமும் தருமமும்.41
பூனைக்கு இல்லை, தவமும் தயையும்.42
ஞானிக்கு இல்லை, இன்பமும் துன்பமும்.43
சிதலைக்கு இல்லை, செல்வமும் செருக்கும்.44
முதலைக்கு இல்லை. நீத்தும் நிலையும்.45
அச்சமும் நாணமும் அறிவு இலோர்க்கு இல்லை.46
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.47
கேளும் கிளையும் கெட்டோர்க்கு இல்லை.48
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா.49

குடை நிழல் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து, ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்.50

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.51

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசோடு இருந்து அரசாளினும் ஆளுவர்.52