பக்கம்:நீளமூக்கு நெடுமாறன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

அவளுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்று அரக்கன் எண்ணினான்.

உடனே அவன் ஒரு கத்தியை எடுத்து அவளுடைய குரல்வளையை இரண்டு பக்கமும் காதுவரை கிழித்து விட்டான். அவள் இந்த நிலையில் இறந்து போனாள். அவளுக்கு நன்றாகப் புத்தி வரவேண்டும் என்பதற்காக மத்தியானம் வரையில் அவளைச் செத்த நிலையிலேயே வைத்திருந்து பிறகுதான் உயிர்ப்பிக்க வேண்டும் என்று அரக்கன் நினைத்திருந்தான்.

மத்தியானம் வந்தது! அவனுக்கு வயிற்றுப்பசியும் எடுத்தது. மனைவியை உயிர்ப்பித்துச் சோறு போடச் செய்ய வேண்டும் என்று தோன்றியது. தோட்டக்காரனிடம் பறித்துவந்த துருத்தியை எடுத்து அரக்கியின் மூக்கிலே பொருத்தி ஊது ஊது என்று ஊதினான். அவன் முகம் வீங்கிச் சிவக்கும்வரை ஊதினான். ஆனால் அரக்கி செத்தபடியேதான் கிடந்தாள்!

கடைசியில் அரக்கன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான். தன் முட்டாள்தனத்தால் அருமை மனைவியை இழந்த துக்கம் தாங்காமல் தலைமயிரைப் பிய்த்துக் கொண்டு மாளிகை அதிரும்படியாகக் கூச்சலிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடினான். அவன் மனைவி அப்படி ஒன்றும் அழகியல்ல; அவன் அன்பை கவர்ந்தவளுமல்ல - அவள் ஒரு பெரிய வாயாடிதான். எப்போதும் அவளிடம் சச்சரவிட்டு வாயாடித்தனமாக ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பாள். ஆனால், சுவை சுவையாக உணவு சமைப்பதிலே பெரிய கெட்டிக்காரி! அவனுடைய வேலைக்காரனுக்கோ உளுந்துக்கும் கடுகுக்கும் வித்தியாசம் தெரியாது. ஆகவே தான் அரக்கன் தன் மனைவியை இழந்தது பற்றி அவ்வளவு துாரம் வருந்தினான்.