பக்கம்:நூறாசிரியம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௩

கழகத்து அரசேந்திரன் இளங்கோவன் செஞ்சிக் கோட்டத்துத் தேவனூர்ச் செம்மல் சிவலிங்கம் முதலிய புகழுக்குரியோர்களை ஏத்தி நிலை நிறுத்திப் போற்றி நினைவுகூரும் மறத்திற்கியலா அம்மறவர்களுக்கான மாட்சிப் பாடல்கள் தொடுவான் தொட்டொளிரும் காலத்தால் தேய்தலில்லா நடுகற்களாகவே நாட்டப் பெற்றுள்ளன. மிகப்பல பாடல்களில் அன்றைய வரலாற்று நிகழ்ச்சிகள் தெருள்செறியப் பதிவாக்கம் பெற்றுள்ளன.

பொருட்செறிவும் காலப் பழமையும் வாய்ந்த பன்னூற்றுக் கணக்கிலடங்கிய அழகிய தீந்தமிழ்ச் சொற்களையும் - அவற்றின் பொருள்களையும் அனைவரும் பொதுப்பட விளங்கிக்கொள்ளுதல் மிக அரிதாதலின் இதுகாறும் வெளிப்பட்ட அறுபத்தாறு பாடல்களுக்கும் ஐயா அவர்களே சிறக்க உரை வரைந்துள்ளார். அவை எதிர்காலத்தில் இன்னும் விளக்கங்கள் பெற்றுச் சிறப்பேறும்! உரையிலையேல் இம்முயற்சி பெரும்பயன் தராது போம் என்ற நிலையுண்மை யுணர்ந்தே இவ்வுடன் முயற்சியையும் உரிய வகையில் உரம் பெறுமாறு பிணைந்துள்ளார். அவரே -

குழந்தைகளுக்கெனப் பாடியவிடத்து இவ்வுண்மையைக்

“கரையில்லாத ஏரித் தண்ணீர்
கழனிக் கென்னும் உதவாது
உரையில்லாத செய்யுள் நூலோ
உணரார்க் கென்றும் உதவாது” (பள்ளிப்பறவைகள்: பக்கம்: 39)

- என்றவாறு கருத்துரைப்பதினின்றும் கண்டுணரலாம்

பாடல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அருஞ்சொற்கள் ஊடாடுகின்றன! அவை மீட்சிப் பேறு எய்துதலோடு வழிவழி வழங்க இந்நூல் வழி வழிகாலும் வாய்ந்துள்ளது. இவற்றொடு புத்தம் புதிய அழகிய சொல்லாக்கங்களையும் ஐயா அவர்கள் துணிந்தியைத்துள்ளார். பழையன பேணும் உரிமைக் காப்பு வயாவும், புதியன தேறிக்கூறி வீறும் புதுமைக் கோப்பு அவாவும் இவர்க்குள்ள சிறப்புப் பண்புகள். அவற்றின் அழகசைவுகளை நூலுள் பரக்கக் காணலாம்.

புதுச் சொல்லாக்கங்கள் சில:
1. விழியிலி - குருடன்
2. பொண்மை = பொய்மை
3. போன்மை = போலிமை

“பொண்மையும் போன்மையும் மிக்க உலகத்து’ (பாட்டு: 7: உரை)

4. பின்னகம் = தலைமயிர்ப் பின்னல் (பாட்டு 10: வரி: 10)
5. பிஞ்சுமை = பிஞ்சாந்தன்மை (பாட்டு 11:வரி: 9, உரை)
6. கவற்சி = (கவல்+சி) கவற்சி =கவலை (பாட்டு: 12. உரை)
7. தண்ணுதல் = குளிர்ச்சியுறுதல்(பாட்டு: 16:6)