பக்கம்:நூறாசிரியம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42 சாய்த்தலும் நன்றே!

                         வற்றக் காய்ந்த வறற்களிப் பிளவை
                         துற்றப் பொழிதரத் துளும்புநீர் ஏரிக்
                         கொடுங்கரை யிரிந்தூர் குலைவுறு முன்னம்
                         பாய்கால் எற்றுப் பயன்கொளு பான்மையின்
                         ஆய்வழித் தேங்கிய ஆக்கம் 5
                         சாய்வழிச் சாய்முன் சாய்த்தலும் நன்றே!

பொழிப்பு:

அடி மண்ணும் ஈரம் வற்றும்படி காய்ந்து வறண்ட களிமண் நிலத்து, வெடித்துப் பிளந்த பிளவுகள் மீண்டும் நெருங்கி இணையுமாறு பொழிந்த மழையால் நிரம்பித் துளும்புகின்ற ஏரியின் வளைந்த துரை உடைந்து, அண்டையயல் ஊர்கள் நிலை குலையுமுன், அவ்வூர் மக்கள் வடிகால் வெட்டி, வீணாய்ப் போகும் அவ்வேரி நீரைப் பயன் கொள்ளுதல் போல், ஏதோ ஓர் ஆகின்ற வழியான் வந்து தேங்கிக் கிடக்கும் ஆக்கம், தானே கட்டுடைத்துக் கொண்டு அது சாய வேண்டிய வழிச் சாய்வதற்கு முன்னம், அதனைப் பல்வகைப் பயன்களுக்கும் பலர்பாலும் தாழும்படி செய்தல் அனைத்தினும் நன்றாம் என்க.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

ஏதோ ஒர் ஆகின்ற வழியால் ஒருவர் பால் வந்து தேங்கிக் கிடக்கும் செல்வம், அது தானே வழியில் கழிந்து போகுமுன், அதனைப் பலர்க்கும் பயன் தரும் வகையில் பயன்படுத்த முயற்சி செய்வது நல்லது என்னும் இயற்கை உண்மையை எடுத்துக் கூறுவதாகும் இப்பாடல்.

நன்றாக நீர் வறளும்படி காய்ந்து பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் களிமண் நிலத்தில், அவ்வெடிப்புகள் பொருந்தி இணையும்படி மழை பொழி தருகிறது. அதனால் ஏரி நிரம்பி நீர் துளும்பி நிற்கிறது. நீரின் அழுத்தம் தாளாமல் கரை உடைப்பெடுத்துக் கொள்ளும்; அதனால் அண்டையயல் ஊர்கள் முழுகி அழியும் என்பதை முன்னுணர்ந்து கொண்ட மக்கள் அதற்கு வடிகால் எடுத்து நீரை ஒழுங்குபட வாய்க்கால் வழிச் செலுத்திச் சேய்மையிலுள்ள வயல்களுக்குப் பாயும்படி செய்கின்றனர். அதுபோல் நிரம்பிய செல்வம் ஏதோ ஓர் ஆகும் வழியால் ஒருவரிடம் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/224&oldid=1209016" இலிருந்து மீள்விக்கப்பட்டது