பக்கம்:நூறாசிரியம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

321


யாண்டு அவன் ஆயினும் - அவன் எவ்விடத்தானாய் இருப்பினும்

மாண்டுப் பீடொடு - மாட்சிமையுடையனாகிச் செம்மாந்திருத்தலோடு.

மாட்சிமை - நற்குண நற்செயல்கள். பீடு - செம்மாப்பு

வேண்டுவ சுரக்கும் வியன் தமிழ்- தேவைப்படுங் கருத்துக்களை ஊற்றுப் போல் தொடர்ந்து சுரந்து கொண்டிருக்கும் பெருமை பொருந்திய தமிழ்.

அறிவியல் வளர்ச்சியால் கண்டுபிடிப்புகளும் புதுப்புனைவுகளும் நாளுக்குநாள் பெருகி; பன்னாட்டு, பலவின, பன்மொழித் தொடர்புகள் மிகுந்து, நாகரிகங்களின் போக்குமாறி, செய்தித் தொடர்புகள் பெரிதும் எளிமைப்பட்டிருத்தலின் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, எந்நிலை வாழ்க்கைக்கும் எத்துறை அலுவலுக்கும் எவ்வகைப்பட்ட கல்வி, கலை, தொழில் முதலானவற்றுக்கும் பயன்படத்தக்கதாய் எக்கருத்தையும் துணுக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லவும், எச்சிக்கலுக்கும் தீர்வுகாணவும் தேவையான சொல்வளமும் கருத்துவளமும் தழைத்து, மேற்கோள்களும், உவமைகளும், பலமொழிகளும் நிறைந்த இலக்கண இலக்கிய நூல்வழக்கும் என்றும் நிலவும் மக்கள் வழக்கும் உடையதாய் இருத்தலின் தமிழை வேண்டுவ சுரக்கும் வியன் தமிழ் என்று சிறப்பித்தார்.

"இற்றைக் கியல்வன இனிமேல் எழுவன முற்றும் செந்தமிழ் மொழிக்குள் அடக்கம்” என்பது ஆசிரியர் கூற்று

கல்வி அறப்போகித் துணிந்து- (கல்வியைக் கற்றுணர்ந்து முடிபு கண்டு. கல்வி துறை அறப் போகித் துணிந்து

தமிழ்க்கல்வியை நிறைவுறவும் ஐயந்திரிபுகளறவும் கற்றுணர்ந்த முடிபுகண்டு என்றவாறு,

குறையற வடித்து உவந்து அளிக்கும் வாயினானை- குறைபாடு இன்றியும் கேட்போர் தெளிவுறவும் இனிது எடுத்துரைக்கும் வாயை யுடையவனை.

அளித்தல் கருத்தை வழங்குதல்.

மிடிந்தார்க்கும் இரங்கும் செவியினானை - வறுமையுற்றாற்போல் இரக்கங்கொண்டு அவர்தம் வேண்டுகோளை ஏற்கும் செவியை யுடையவனை.

இரங்குதலாவது இரக்கங்கொண்டு அதற்குத் தக உதவுதல், இரங்கத் தக்க மிடிந்தார்தம் வேண்டுகோளைச் செவிமடுத்துவிடின் அவன் தவறாது உதவுவான் என்னும் உறுதிப்பாட்டைப் புலப்படுத்துவார் அவன் செய்யும் உதவியைச் செவியின் மேல் ஏற்றிக் கூறினார். மிடி-வறுமை. 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/347&oldid=1221203" இலிருந்து மீள்விக்கப்பட்டது