பக்கம்:நூறாசிரியம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6செங்கட் சேய்


விழவிற் றப்பிய செங்கட் சேஎய்
கொழுவிய கூறினு மொழுகா தலமர
வொருதாய்த் தேடி யுவந்து புன்றலை
பெருமடி புதைக்கும் பெற்றிதே தோழி!
அண்மைத் தாயினுஞ் சேய்மைத் தாயினும் 5
பெண்மைக் கொன்றிய நெஞ்சம் நாடித்
தேங்குவ தியல்பின் தேரார்
யாங்குகொல் முனிவது? யாதிவர் வினையே!


பொழிப்பு:

விழாக் கூட்டத்துள் தன் தாயின் பிடியினின்று தவறிய சிவந்த கண்களையுடைய நடைபயில் குழந்தை உறவும் நொதுமலும் ஆகிய பிறர், மருட்சியுற்ற அதன் மனத்தைத் தேற்றும் கொழுமையான உரைகளைக் கூறினாலும், அவர்பால் இருந்து பயில்தலையறியாமல், மனம் சுழற்சியுறத் தன் ஒருதனித் தாயைத் தேடிக் கண்டு உவந்து, தன் இளந்தலையை அவளின் பெருமை பொருந்திய மடியில் புதைத்து ஆறுதலுறும் தன்மை வாய்ந்தது, தோழி! அது போல் அருகிலிருப்பினும் தொலைவிலிருப்பினும் மன, மொழி, மெய்களால் ஒருத்தியின் பெண்மைக்குப் பொருந்திய ஆண்மமையுடையவனின் அருள் நெஞ்சம் ஒன்றையே நாடி, அதன் இணைப்பில் தேங்கி அமைதியுறும் தன்மையைத் தத்தமக்குற்ற இயல்பினால் உண்ர்ந்து தேர்ந்து கொள்ளாத இவர் எம் உளத்தை உணராது செய்ய முற்படும் வினை எத்தகைய சிறுமை உடையது!

விரிப்பு :

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தலைவியின் பெற்றாரும் மற்றாரும் தம் உறவோன் ஒருவனுக்கு தன்னைக் கொடுக்கும் மணவிழா முயற்சிகளைக் கண்ணுற்றுத் தன் உள்ளம் ஏற்கனவே தனக்குப் பொருந்திய ஒருவனை நாடியதென்றும், அவன் உள்ளத்தன்றி அஃது அமைதியுறும் இடம் வேறில்லை என்றும் கூறி, அவர் செயல்களைப் பேதைமை என்று கடிந்து, தலைவி தன் தோழிக்கு உணர்த்துவதாய் அமைந்தது இப்பாட்டு.