பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

நெஞ்சக்கனல்


ஒரு கணம் எருக்கம்பூ மாலையும் கையுமாகக் காந்திராமன் எதிரே தோன்றிச் சிரிப்பது போல் பிரமை உண்டாயிற்று. உலகில் எல்லாரும் ஒன்று சேர்ந்துகொண்டு, ‘நீ அவமரியாதைக்குரியவனே!’ என்று தன்னை ஒதுக்கி விட்டது போல் தோன்றியது அவருக்கு அன்று அந்த வார ‘சர்வோதயக் குரல்’ வெளியாக வேண்டும். கடைக்கு ஆளனுப்பி ஒரு பிரதி வாங்கி வரச் செய்து காந்திராமன் தன்னைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும் போல் அவருக்கு ஆசையாயிருந்தது. சமையற்காரனைக் கூப்பிட்டுச் சில்லறை கொடுத்து “‘சர்வோதயக் குரல்’ இந்த வாரப் பிரதி ஒண்னு வாங்கிட்டு வா” என்று கூறியனுப்பினார்.

சமையற்காரன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து, “இன்னும் வரலீங்க...சாயங்காலம் தான் கிடைக்கும்னு கடைக்காரன் சொன்னான்”–என்று சொல்லிக் காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான். சாயங்காலம் வரை காத்திருக்கப் பொறுமையின்றித் தவித்தார் அவர்.

சில வேளைகளில் ஆழமாகச் சிந்தித்த போது தன்னை ஆதரிப்பவர்களைப் போலவும் நேசிக்கிறவர்களைப் போலவும் நடித்தும், கூழைக்கும்பிடு போட்டும் ஏமாற்றியவர் களைவிட நேருக்குநேர் தைரியமாக எதிர்த்துக் கொண்டிருக்கும் காந்திராமன் நல்லவர் என்று தோன்றியது கமலக்கண்ணனுக்கு, அரசியலில் போலியான துணையை விட நியாயமான எதிர்ப்பு நல்ல உதவி செய்ய முடியும். கூழைக் கும்பிடுபோடும் பொய்யான நண்பனைவிட மனதிலிருந்து வெளியாகும் உண்மைச் சொற்களால் எதிர்க்கும் எதிரி நல்லவன் என்று நம்பலாம் போலிருந்தது. தொண்டு செய்கிறவனுக்கு இருக்கிற சுயமரியாதை– பதவியிலிருக்கிறவனுக்கு இருப்பதில்லை தொண்டு செய்கிறவனுக்கு இருக்கிற துணிவும் செருக்கும். ஆண்டு கொண்டிருக்கிறவனுக்கு, இருக்க முடிவதில்லை. தொண்டனாக இருந்து இயக்கத்தை, அதன் சத்திய ஆவேசத்தைத் தன் நெஞ்சினுள்ளேயே வேள்வித்தீயைப் போல ஓர் அவியாத கனலாக