பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
192
நெஞ்சக்கனல்
 


சத்திய ஆவேசம் என்ற கனல் ஒளிர ஒளிர–அதை வளர்த்த படியே ஒரு முழு வாழ்க்கையை அசல் வாழ்க்கையைத் தொண்டனாக வாழ வேண்டும் போல் தவிப்பாயிருந்தது அவருக்கு.

–உடனே அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை மறக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படி மறக்கவும் முடியவில்லை.

ஏனென்றால் விருப்பு வெறுப்பற்றுப் பிரதிபலனைக் கணக்கிடாமல் தொண்டு செய்யும் தொண்டன் ஒருவனைத் தவிரப் பொது வாழ்வில் யாரும் மற்றவர்களுக்குப் பயப் படாமல் இருக்க முடியாது. அரசியலில் ஒருவன் தொண்டனாக இருக்கிறவரை தான் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ அவனுக்குப் பயமில்லை.

தலைவனாகவோ, பதவிக்குரியவனாகவோ வந்த பின்புதான் ‘இங்கிருந்து மறுபடியும் கீழே இறங்கி விடுவோமோ’ என்ற பயமும் இதற்கும் ‘மேலே மேலே போக வேண்டுமே’ என்ற சுயநலமும் வருகின்றன.

உடனே மீண்டும் மறுபிறவி எடுக்க முடியுமானால் வாழ்நாள் முழுவதும் இந்தப் பயமும் சுயநலமுமில்லாத நெஞ்சக்கனலுடன் காந்திராமனைப் போல் ஒர் நியாய வாதியான ஏழையாகப் பிறக்கத் தவித்தார்.

இந்த விநாடியிலும் இனி எந்த விநாடியிலும் இந்தத் தவிப்பும் தாகமும்தான் அவர் மனத்தை நெருப்பாய் எரித்துக் கொண்டிருக்கும் போலும்.