உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 போய் வருகிறேன் என்றாள் என் பத்மா என் மனைவி பத்மாவின் கலங்கிய விழிகள் என்னைக் கண்டு, பிடித்து விட்டன. காய்ச்சல் களைப்பிலும், பிரசவ வேதனை வலியிலும், ஏதோ இனந் தெரியாத சோகத்திலும் மூழ்கியிருந்த அவள் என்னைப் பார்த்துத் தழுதழுத்த குரலில், “போய் வருகிறேன்" என்றாள். அவள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டது மருத்துவ மனைக்குத்தானா? இல்லை! இல்லை! 'ஆ!'ஊ!' என்ற நோயாளிகளின் அலறலும், 'அம்மா! அய்யோ! என்ற கூச்சலும், டாக்டர்கள், நர்சுகளின் நடமாட்டங்களும் நிறைந்த அமைதியற்ற மருத்துவ மனைக்குச் செல்ல அவள் என்னிடம் விடை பெற்றுக்கொள்ளவில்லை. அமைதி நிறைந்த ஓர் இடத்துக்கு அவள் என்னிடம் விடை பெற்றுக் கொண்டுதான் அப்படிக் கண்ணீர் விட்டிருக்கிறாள் தான் தைரியமாக இல்லாவிட்டாலும் நோய் நொடி விஷயங்களில் மற்றவர்களுக்குத் தைரியம் கூறும் என் தாயாரின் முகமும் சரியாக இல்லை. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட பத்மாவுக்கு மறுநாளே குழந்தை பிறந்தது. இப்போது என்னைவிட உருவத்தில் ஒரு பங்கு அதிகப் பெரிய வனாக இருக்கும் முத்து, சின்னஞ்சிறு பிஞ்சாக, பத்மாவின் அருகில் படுத்திருந்தான். தன் அரவணைப்பில் உள்ள குழந்தையையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தவாறு பத்மா புன்னகை புரிந்தாள். அதுதான் அவளது கடைசிப் புன்னகை என்று எனக்கு அப்போது தெரியாது. இரண்டு நாள் தொடர்ந்தாற்போல் கூட்டங்களுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய என்னிடம், பத்மாவுக்கு விடாமல் காய்ச்சல் அடிக்கிறது என்ற செய்தி கூறப்பட்டது. மருத்துவ மனைக்கு ஓடினேன். அவளால் சரியாகப் பேசமுடியவில்லை. டாக்டர்களிடம் கேட்டேன். அவர்கள் பத்மாவின் ரத்தத்தை எடுத்து கிண்டிக்குச் சோதனைக்காக அனுப்பியிருப்பதாகவும் அந்த முடிவு வந்தால்தான் காய்ச்சலுக்கான காரணம் தெரியுமென்றும் சொன்னார்கள். உடனடியாகக் கிண்டிக்குச் சென்று சோதனை முடிவைத் தெரிந்து வரும் வசதி ஏது எங்களிடம்? 104