உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கலவரத்தையும், அதில் காணப்பட்ட மிருகத்தனங்களையும் அடக்குவதற்குப் பதிலாக, ஒருதலைப் பட்சமாகவே அன்றையக் காங்கிரஸ் ஆட்சி போலீஸ் படையைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டது. தங்கள் கட்சி வெறியைக் காட்டிக் கொள்வதற்கு இரு சமூகங்களின் இடையே 'குருட்சேத்திரப் போரை' உருவாக்கி, இறுதியில் சிலரைப் பழிவாங்கிக்கொண்டது காங்கிரஸ் ஆட்சி. கட்சி கலவரத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினரைச் சார்ந்தவர்கள் ஐந்து பேர் களைக் கைகளைக் கட்டி நிற்க வைத்து சுட்டுச் சாகடித்தனர். காங்கிரசாட்சியினர் இப்படிப் பல சம்பவங்களை நடத்தியதாகச் சொல்லப்பட்டாலும், இந்த ஒரு சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. அதனை மறைப்பதற்குக் காமராசரும் அப்போதிருந்த காங்கிரஸ் அமைச்சர்களும் கோழைத்தனமான சமாதானம் சொல்லத் தலைப்பட்டார்கள். உத்திரப் பிரதேசத்திலும், வங்காளத்திலும், பஞ்சாபிலும் பிரிவினையின்போது நடைபெற்ற கொடூரங்கள் நமது மாநிலத்திலேயே நடக்கத் தலைப்பட்டு விட்டதையும், அதைக் காமராசர் ஆட்சி வெகு வாக ரசித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததையும் நினைத்து நாங்கள் குமுறினோம். பரமக்குடி, முதுகளத்தூர், சிவகங்கை, அருப்புக்கோட்டை ஆகிய நான்கு வட்டங்கள் (கிழக்கு ராமநாதபுரம்) முழுவதும் இந்த அவலம்- மிருகத்தனம்- தொடர்ந்து ஒரு மாதத்திற்குமேல் தாண்டவமாடிற்று. அரசாங்கம் இருக்கிறதா என்பதே அந்தப் பகுதி மக்களுக்கு ஐயத்தைக் கிளறும் அளவுக்குக் காங்கிரஸ் ஆட்சி தூங்கி வழிந்தது. கலவரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளும், தேவர் சாதியினர் வீடுகளும் சாம்பலாக்கப்பட்டன. தமிழகம் கொடூரமான சாதிச் சண்டையைக் கண்டது. 1957-ல் முதுகளத்தூர் பகுதியில் அப்போது கழகம் வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கழகக் கிளைகளோ கழக உறுப்பினர்களோ இல்லாத அந்தப் பகுதிதான் சாதிச் சண்டையின் களமாக அமைந்திருக்கிறது என்பதைக் கவனித்த எங்களுக்கு, தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும் கழகக் கிளை அமைய வேண்டிய அவசியம் தெளிவாகப் புரிந்தது. இது சம்பந்தமாக அந்தப் பகுதியில் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டும், கிளைகளை அமைக்கத் தோது பார்க்குமாறும் அறிஞர் அண்ணா அவர்கள் என்னைப் பணித்தார்கள். 328