உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவசாயிகள் நிறைந்த பகுதி என்று அப்போது கருதப்பட்ட தஞ்சை மாவட்டத்திலேயே அந்தச் சுற்றுப்பயணம் தொடங்கிற்று. இந்தச் சுற்றுப் பயணத்தின் போது 22-5-63 அன்று குடந்தையில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய பேச்சைத் திரித்து "தி. மு. கழகத் தையே கலைத்து விடுவதாக அண்ணாதுரை கூறினார்" என்பதாகச் சென்னை இதழ்கள் சில செய்தி வெளியிட்டன. எத்தகு கேலி கிண்டல்களையும் தாங்கிக் கொள்ளும் அண்ணா அவர்களுக்கு இந்தச் செய்தியைப் படித்ததும் ஏற்பட்ட கோபத்தை எதிரிலிருந்து பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன். அடுத்த நாள் இதுபற்றிக் குறிப்பிட்டுச் சென்னையில் பேசுகையில் அண்ணா அவர்கள் குறிப்பிட்டது இன்றைக்கும் பொருந்தும். "தி.மு. கழகத்தைக் கலைத்துவிட மாட்டேனா என்று ஆவலுடன் எதிர்பார்த்துச் சிலர் ஏங்குகிறார்கள். நானா கழகத்தைக் கலைத்து விடுவேன்? நான் கலைக்க நினைத்தால்தான் முடியுமா? அப்படி எதிர்பார்ப்பது ஜனநாயகம் தெரிந்தவர்களின் செயல் அல்லவே! தி.மு.கழகம் என்ன, என் வீட்டு மாட்டுக் கொட்டடியா நான் நினைத்ததும் கலைத்து விடுவதற்கு? மக்களால் கட்ட ப்பட்டதல்லவா அது! "குறைந்தது 25 பேர்களைக் கொண்ட 4000-க்கு மேற்பட்ட (1963-ல் 4000; இப்போது சுமார் 20,000) கிளைக் கழகங்கள் சேர்ந்து அமைத்த வட்டக் கழகங்கள்: அவற்றிற்கு மேலே மாவட்டக் கழகங்கள்; அவற்றிற்கு மேல் பொதுக்குழு; செயற் குழு; தலைமைக் கழகம். இப்படி அடியிலிருந்து ஜனநாயகக் கோவையாக அமைக்கப்பட்டிருப்பது தி.மு. கழகம். இதை எப்படி ஒருவர் நினைத்தால் கலைக்க முடியும்?" ஆம், அண்ணா அவர்களே நினைத்தாலும் கலைக்க முடியாது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட தி. மு. கழகத்தை - அவரால் உழைத்துப் போற்றி வளர்க்கப்பட்ட கழகத்தை - யாரால்தான் அழிக்க முடியும்? சிதைக்க முடியும்? பிரிவினைப் பிரச்சாரத் தடைச் சட்டத்தின் நோக்கம் கண்டிப்பாகத் தோற்கடிக்கப்பட்டேயாக வேண்டும் என்பதில் கழகத்தவர் மட்டுமல்ல, பொதுமக்களும் குறியாக இருந்தார்கள் என்பதைச் சுற்றுப் பயணம் அண்ணாவுக்கே தெளிவாக நிரூபித்தது. கழகத்தைக் கலைக்க வேண்டும். பிரிவினைப் பிரச்சாரத் தடைச் சட்டத்தை எதிர்க்க வேண்டும். 429