உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. நடராசன் அவர்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழ் காக்கும் இயக்கத்தில் ஈடுபட்டார் என்பதேயாகும். தன்மான இயக்கக் கருத்துக் களில் எதிர்ப்பு அணியில் இருந்த மறைமலை அடிகளார் போன்ற பெரும் தமிழ் அறிஞர்கள் எல்லாம் தன்மான இயக்கத் தலைவர் பெரியார் அவர்களுடன் இணைந்து இந்தியை எதிர்த்தது தமிழ்ப் பற்று மிகுதியால் அன்றோ? துடிக்கும் இதயத் துடிப்பெல்லாம் தமிழ்ப் பண் ஒலிக்கும் வயதும், ஆர்வமும் படைத்த நான், இந்தி எதிர்ப்புத் துண்டு அறிக்கையை இந்தி ஆசிரியர் கையிலே கொடுத்ததும் ஒரு புரட்சிகரமான செயல் என்றுதான் கருதினேன். வகுப்பறையில் உள்ள கரும் பலகையில் இந்திச் சொற்கள் சிலவற்றை அவர் எழுதினார். அவைகளை உச்சரிக்குமாறு எனக்கு ஆணையிட்டார். நான் எழுந்து நின்றேன். "ம்! படி பார்க்கலாம்?" என்றார். எனக்குப் புரிந்தால்தானே படிக்க முடியும்? அதனால் பேசா மல் நின்றேன், அருகே வந்தார். வகுப்பறை எதையோ எதையோ ஆவ லுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆசிரியர் என் காதைத் ருகினார். "படிக்க முடியுமா? முடியாதா?" என்று உறுமினார். "புரியவில்லை" என்றேன். கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வகுப்பறை சுழல்வது போன்ற உணர்ச்சியில் தலை சுற்றியது எனக்கு. சமாளித்துக் கொண்டு பலகையில் உட்கார்ந்து விட்டேன். ஆசிரியர் ஏன் அடித்தார் என்பது எனக்குப் புரிந்து விட்டது. "முதல் நாள் ஊர்வலத்தின்போது நான் செய்ததும் சரி தான்! இப்போது அவர் செய்ததும் சரிதான்." இவ்வாறு என் நெஞ்சு எனக்கு நீதி வழங்கியது. ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். மாணவர்களைத் திரட்டி இந்தி ஆசிரியர்க்கு எதிராக வேலை நிறுத்தம் போன்ற கிளர்ச்சிகளைச் செய்வேன் என்று! என் மூளை அப்படி வேலை செய்யவில்லை. இந்தி இந்தி ஆசிரியர் அவராகவே இரண்டு மூன்று நாள் உயர்நிலைப் பள்ளிக்கு வராமல் இருந்து விட்டார். திருவாரூர் உயர்நிலைப்பள்ளி வாயிற்புறத்திலும் தமிழ் இயக்கத்தார் நாள்தோறும் மறியல் அறப்போர் நடத்தினார்கள். நான் இந்தி வகுப்புக்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டேன். இந்தி ஆசிரியர் என்னை அடித்து முப்பத்து ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதே இந்தி ஆசிரியர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை மயிலையில் நடந்த ஓமியோபதி மாநாட்டுக்கு என்னை அழைத்துச் செல்ல வெளியே காத்துக் கொண்டிருந்தார். 45