உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு அறிக்கை விடும் அளவுக்கு அன்று கோலோச்சிய ஆளும் காங்கிரசார் கொடுமைகளைப் புரிந்திட்ட போதிலும், அண்ணாவும், மற்ற கழக முன்னணியினரும், காராக்கிரகத்தில் அடைபட்டுக் கிடந்த நிலையிலும், எதிர்பார்த்ததற்கு மேல் வெற்றிக் கனிகளையே கொய்தது கழகம். அதற்கு முன்னர் இருந்ததை விட அதிகமான எண்ணிக்கை யில் நகராட்சி மன்றங்களையும் சென்னை மாநகராட்சியையும் கழகமே கைப்பற்றியது. அந்தத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளைச் சீரணித்துக் கொள்ள முடியாத காங்கிரசார், அப்போது நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் திலும் தங்கள் ஆற்றாமையைக் காட்டினர். வயிற்றெரிச்சலைக் கொட்டி வசைமாரி பொழிந்தனர். தேர்தலின்போது தீக்குளித்த சின்னச்சாமி யின் படம் வெளியிடப் பட்டதைப் பற்றி ஏளனமாகவும் பேசினர். நிதி நிலை அறிக்கை பற்றிய விவாதத்தில் அப்போது கலந்து கொண்ட நான் அந்தப் படம் வெளியிட்டது பற்றி இவ்வாறு குறிப்பிட் டேன்: "தேர்தலின்போது சின்னச்சாமியின் படம் வெளியிட்டதைப் பற்றி இங்கே பேசப்பட்டது. எனது நண்பர் அன்பில் தர்மலிங்கம் இது பற்றி, 'இறந்தவர்களுக்கு ஒரு மரியாதை கூடக் கொடுக்கக் கூடாதா?' என்றார். படம் "அதற்கு முதலமைச்சர் (பக்தவத்சலம்) 'மரியாதை செலுத்தலாம்; ஆனால், படமாக வெளியிடக் கூடாது' என்றார். எங்களைப் போடக்கூடாது என்று கூறிவிட்டு, மாநகராட்சித் தேர்தலில் திருப்பதி வெங்கடேசுவரர் படத்தையும் போட்டு, காளை மாட்டுச் சின்னத்தைப் போட்டு வெளியிடுவது பண்பா என்று முதலமைச்சரைப் பணிவோடு கேட்கிறேன். மதத்தின் பெயரால் - மதப்பிரச்சாரத்தால் - கடவுள் படங்களைப் போட்டுத் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் சட்டம் இருப்பதாக எனக்குக் கவனம். நீங்கள் மாத்திரம் பெரியசாமியின் படத்தைப் போடும்போது சின்னச்சாமியின் படத்தை நாங்கள் போட்டது தவறா? இந்த என் வினாவிற்கு எந்த விடையும் பகர்ந்திடவில்லை. அப்போதைய முதலமைச்சர்! தமிழகச் சட்ட மன்றத்திலே திருவள்ளுவர் படத்தினைத் திறந்து வைத்திட வேண்டும் என்று நான் வற்புறுத்தி வந்ததைப் பற்றி மூன்பே குறிப்பிட்டிருக்கிறேன். 1959-லேயே நான் எழுப்பிய கோரிக்கை ஐந்து ஆண்டுகள் கழித்து 1964 பிப்ரவரி 23-ல் தான் கோலாகலமாகத் தமிழ்ர் களின் உள்ளமெல்லாம் குளிர்ந்திடும் வண்ணம் நிறைவேறிற்று. 503