உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவும், கண்ணாம்பாவும் அதில் அருமையாக நடித்திருந்தனர். இளங்கோவன் அவர்கள் எழில் கொஞ்சும் தமிழில் வசனம் எழுதியிருந் தார். ஆனால் அந்தப் படம் புராணப்படம் போலத்தான் வெளிவந்தது. நான் 'பூம்புகாரை' உருவாக்க முற்பட்டபொழுது, அந்தப்பழைய படத்தைப் பற்றிய எண்ணங்களும் என் மனத்தில் மின்னலிட்டன. சிறைப் 'பறவையாக அடைபட்டிருந்த போதுதான், என் சிந்தை யில் கருக் கொள்ளத் தொடங்கிற்று 'பூம்புகாருக்' குரிய திரைக் கதை. ஒரு காப்பியத்தைத் தழுவித் திரைப்படம் எடுத்திடும் பொழுது, எத்தனையோ சிக்கல்கள் இடையிலே குறுக்கிடும். அத்தகைய இடை யூறுகளை நானும் அப்போது சந்திக்க நேர்ந்தது உண்டு. சிலப்பதிகாரம் எண்ணற்ற வகைகளில் சிறந்திருக்கிறது என்றாலும், இளங்கோவடிகளின் ஓர் அற்புதமான கற்பனைத் திருப்பம் என்கருத்தினை வெகுவாகக் கவர்ந்து விட்டது. அந்தக் காலத்தில் காவியங்களை- இதிகாசங்களை - இயற்றியவர்கள் பெரும்பாலும் அரச குடும்பங்களை வைத்தே கதைகளைப் பின்னினார்கள். ஆனால் அரச குடும்பத்திலே பிறந்தவராக இருந்திட்ட போதிலும், சுக போகங்களைத் துச்சமென மதித்துத் துறவியாக மாறிவிட்ட இளங்கோவடிகளோ, மற்ற இலக்கியப் படைப்பாளர்களின் வழக்கமான கதைப் போக்கிற்கு முழுக்குப் போட்டு விட்டுச் சாதாரணக் குடிமக்களையே தம்முடைய கதைக்குத் தலைவன் - தலைவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை முறைகளை, வளையாத கற்பை, வறுமையை, அந்த வறுமை யிலும் குன்றாத வைரச் செம்மையை வடித்துக் கொடுத்துள்ளார். வண்ண ஓவியங்களாக. இளங்கோவடிகளின் இந்தப் புதுமைக்கதைப் போக்கே என் இதயத்தைப் பெரிதும் ஈர்த்தது காந்தமாக. இவ்வாறு சாதாரணக் குடிமக்களின் ஆசைகளை - அவலங்களை, உணர்ச்சிகளை, உள்ளப் போராட்டங்களை- ஓவியமாக்கிக் காட்டிடும் ஒரு காவியக் கதையில்- ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் பிறர் எண்ணிடும் அளவுக்கு இழித்துரைக்கப்பட்டிருப்பார்களா என்கிற ஐயப்பாடு என்னுள் எழுந்தது. அதற்குத் தகுந்த மாதிரி, அப்போது நிதி அமைச்சராயிருந்த மொரார்ஜி தேசாய் தங்கக் கட்டுப்பாடு சட்டம் ஒன்றினைக் கொணர்ந் திருந்தார். அதனால் ஆயிரக்கணக்கான பொற்கொல்லர்கள் வேலை வாய்ப்பினை இழந்து வீதிகளிலே பிச்சையெடுத்திடும் அளவுக்கு விழி நீரை வெள்ளமாக்கிக் கொண்டிருந்த வேளை அது. அந்த வேதனை நெஞ்சங்களிலே வேல் பாய்ச்சிடா வண்ணம், திரைக்கதையின் போக்கில் சிறிய மாற்றம் செய்வதும் என் கடமையெனக் கருதினேன். சமூக அமைப்பு என்கிற ஆலமரத்தின் விழுதுகளாக விளங்கிடும் 528