உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1965 - ஜனவரி-26 குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதே கழகம் எடுத்திட்ட முடிவாகும்; அதற்குக் கட்டுப்பட்டே நானும் மற்றக் கழக முன்னணியினரும் கண்ணியத்துடன் கடமையாற்றிடப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டிட - எழுத்து மூலமும் பேச்சு மூலமும் முற்பட்டோம். மாணவச் செம்மல்களோ, அந்தக் குடியரசு நாளைக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்தியை எதிர்த்துக் கண்டன ஊர்வலங்களும் கூட்டங்களும் நடத்துவது என்றும், தட்சிண பாரத இந்திப் பிரச்சார நூல்களைச் சென்னைக் கடற்கரையிலே தீயிட்டுக் கொளுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றி விட்டனர். அதன்படியே செயலிலும் இறங்கி விட்டனர். மாணவர்களின் அந்த எழுச்சி தானாகப் பீரிட்டடித்த ஊற்றுப் பெருக்கே அல்லாமல், இன்னொருவர் கொண்டு வந்து ஊற்றிய நீர் அல்ல. ஆயினும் அரசுத் தரப்பினரும் ஆளுங்காங்கிரசைச் சார்ந்தவர்களும் மாணவர் போராட்டத்துடன் கழகத்தையும்- குறிப்பாக என்னையும் முடிச்சுப் போட்டுப் பேசுவதிலேயே முழுகவனமும் செலுத்தினர். கிளர்ச்சிக்குரிய நியாய உணர்வினைத் திசைதிருப்பிச் சாதிப்பதையே ஒரு கேளிக்கையாகவும் மேற்கொண்டனர். உண்மையென்ன வெனில், எந்தக் காரணத்திற்காகக் கழகம் குடியரசு நாளைத் துக்க நாளாக அறிவித்ததோ அதே காரணத்திற் காகவே அறப்போரில் ஈடுபட்டனர் மாணவர்கள். அவர்களில் பலர்- கழகத்தின் கொள்கைகளில் - அண்ணாவின் அறிவொளியில் - ஈடுபாடு முகுந்தவர்களாகவும் இருந்தார்கள். அந்தத் தொடர்பினையே ஆதாரமாகக் காட்டிக் களங்கம் கற்பித்திட முனைந்தனர் காங்கிரசார். மற்றபடி கிளர்ச்சி புரிந்திடுமாறு மாணவர்களைக் கழகம் தூண்டிவிடவும் இல்லை; அவ்வாறு ஒரு கட்சி வந்து தூண்டிவிடும் அளவுக்கு உணர்ச்சி பட்டுப் போன நிலையில் மாணவர்களும் இல்லை. அதே சமயம் அரசு அவிழ்த்து விட்ட அடக்கு முறை-துப்பாக்கிச் சூடுகள் - காரணமாக அமைதியாகத் தொடங்கிய மாணவரின் அறப் போர் எரிமலையாக வெடித்திட்டபோது-அதனைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் வன்முறைகளுக்கும் வழி வகுத்தபோது- போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுரைகள் வழங்கி அறிக்கை வெளியிட்டவர் அண்ணா அவர்களே. தங்களைச் சந்திப்பதற்கு அன்று முதல்வராக இருந்த திரு. பக்தவத்சலனார் மறுத்தாலும், அவரும் அவரைச் சார்ந்தவர்களும் 575