உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதே சரித்திர உணர்வோடுதான் கழகத்தோழர்கள் இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து வெந்தீயில் வெந்து கருகிய சிங்கத்தமிழன் சின்னசாமிக்கு ஒரு நினைவுத் தூண் எழுப்பினர். திருச்சி - தென்னூர் இடுகாட்டில் அந்த மாவீரனின் கல்லறையில் அமைந்த அந்நினைவுத் தூணை 16-4-67-இல் நான் திறந்து வைத்தேன். அப்போது சின்னச்சாமியின் தாயார் தங்கம்மாள், மனைவி கமலா, மகள் திராவிடச் செல்வி ஆகிய மூவரும் அங்கே வந்து நின்ற காட்சி, வெள்ளமெனத் திரண்டு வந்திருந்த கூட்டத்தை விம்மி விம்மி அழச் செய்தது. தமிழக வரலாற்றில் சிறப்பான இடத்தைத் தேடிக் கொண்ட அந்தத் தியாக மறவனின் அன்னையார் எனக்கொரு பூமாலை அணிவித்தார்கள்; அப்போது கண்ணீர் மாலையைத்தான் என்னால் காணிக்கை ஆக்கிட முடிந்தது.