உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் 'தீவுத் திடல்என வழங்கப் பெறும் பகுதி “பூம்புகார்” நகராகப் புது வடிவம் பூண்டது. கலை நேர்த்தியோடு கவினழகு மிளிர்ந்திட அமைக்கப்பட்ட அந்நகரில்தான் இலட்சக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்திடும் வண்ணம் நிகழ்ச்சிகள் பல நடந்தேறின. 4-1-1968-இல் தான் முறைப்படியான ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு தொடங்குவதாக இருந்த போதிலும், ஜனவரி முதல் நாள் முதற்கொண்டே மாநாட்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள் சென்னை மாதக ருக்குத் திருவிழாக் கோலத்தினைத் தரத் தொடங்கிவிட்டன. தமிழைக் காத்தல், தன்மானக் கொள்கைகளைப் பரப்புதல் ஆகிய வற்றை இலட்சிய விளக்குகளாய்க் கரத்தினில் ஏந்திப் பொதுமக்கள் நலத்திற்கே தம் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து, தி.மு.கழகத்தைத் தோற்றுவித்து, ஆட்சிப் பீடத்தையும் அடைந்து காட்டித் தம்முடைய அரும் பெரும் கொள்கைகள் காற்றோட கலந்து போய்விடாமல் செயல் வடிவம் பெற்றிடவும் சீராகப் பணியாற்றிய பேரறிஞர் அண்ணா அவர் களின் சிலை, முன்னர் ‘மவுண்டு ரோடு' என்று அழைக்கப் பெற்ற தற்போதைய 'அண்ணா சாலை'யில் 'ரவுண்டாணா, பகுதியில் நிறுவப் பட்டது. ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தம் பேச்சாற்றலை வெளிப்படுத்தி இந்தியாவின் பெருமையையும் நிலை நாட்டிய டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் அவர்கள் ஜனவரி முதல் நாள் அன்று அண்ணாவின் சிலையைத் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியினைத் தொடர்ந்து ஜனவரி இரண்டாம் நாளில் சென்னைக் கடற்கரையின் நெடுக ஆங்காங்கே, திருவள்ளுவர் அவ்வையார் கண்ணகி கம்பர் வீரமா முனிவர் ஜி.யு.போப் கால்டுவெல் வ.உ.சிதம்பரனார் பாரதியார் பாரதிதாசன் ஆகியோருடைய சிலைகள் திறந்து வைக்கப்பெற்றன. 724