பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

9

தந்தைக்காரர் அருணாசலம் “தமிழு, ஒனக்காகத்தான் காத்து இருக்காங்க; இன்னும் அங்கே என்ன பேச்சு?” என்றார் செல்லமான அதட்டலோடு.

தமிழரசி வெளியே வந்தாள், காதுகளில் ‘ரிங்’ ஊஞ்சலாட, கன்னக் கதுப்பில் முடிமோத, எல்லோரையும் பார்த்துக் கும்பிட்டபடி வந்தாள். ஊரார் பேசும் முன்னாலயே பேசினாள் :

“என்ன மாமா... அத்தைக்கு உடம்புக்கு இப்போ எப்படி இருக்கு? தாத்தா, ஒங்க பேரன் இப்போ எப்படி படிக்கான்?”

“ஏதோ படிக்கான்... கழுதப் பயலுக்கு நீதான் ஒரு வேல வாங்கிக் கொடுக்கணும்.”

“என்னால எப்டி முடியும்?”

“ஏம்மா முடியாது? மந்திரியோடவும், அதிகாரிகளோடயும் நீ இருக்கிற போட்டோவ பார்க்கத்தானே செய்யுறோம்.”

“அதுவா? சில இலக்கியக் கூட்டத்துல பேசச் சொல்லுவாங்க. அங்க மந்திரியும் அவர் பாட்டுக்கு வந்திருப்பார். அவ்வளவுதான்.”

“அவ்வளவோ... எவ்வளவோ... ஒன்னத்தான் நாங்க நம்பியிருக்கோம். நம்ம ஊர்ல - பிறந்து, பெரிய பெரிய வேல பார்க்கிற ஆம்புளப் பயலுவ, சொந்த ஊரை அசலூராய் நினைச்சுட்டானுவ. நீதான் ஊருக்கு நல்லது செய்யணும்.”

இடையில் பேசியவரை மறித்து ஒருவர் பேசினார்.

“என்னவே, இது ஒம்ம பையனுக்கு வேலை, வாங்கிக் கொடுத்தால் ஊருக்கு நல்லது செய்ததாய் ஆயிடுமா? அவனும் அப்புறம் மெட்ராஸ்லயே பழி கிடப்பான்.”