பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணிந்துரை

டாக்டர் மா. இராமலிங்கம், எம். ஏ., பி எச். டி.,

“எழில் முதல்வன்’

தமிழ்த் துறைத் தலைவர்,

அரசு ஆடவர் கல்லூரி, கும்பகோணம்

I

சிக்கலும் குழப்பமும் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் ஏற்படும் எந்தப் பிரச்சினையையும் விவாதிக்க இடம்தரும் பொதுமேடையாக நாவல் ஒன்றே பயன்பட்டு வருகிறது. இலக்கிய வடிவங்கள் பலவற்றுள் எல்லார்க்கும் உரிய மக்கள் இலக்கிய வடிவமாக இதுவே விளங்கிவருகிறது. எனவே, பெரும்பாலான மக்களோடு உறவாட நினைக்கும் இலக்கியக் கலைஞன் இதனையே தம் வெளியீட்டு ஊடகமாக மேற்கொள்கிறான்.

தோழர் சமுத்திரம் சமூக நனவுடைய ஒர் எழுத்தாளர். தாம் அடைய வேண்டிய இலக்கையும் செல்ல வேண்டிய நெறியையும் அவர் தெளிவாகவே உணர்ந்திருக்கிறார். வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கி, மனித உறவுகளையும், அவற்றிடையே விளையும் போராட்டங்களையும் உள்ளது உள்ளவாறே வெளிக் கொணருகிற அவரது கூரிய ஆற்றல் அவரை மிகச் சிறந்த மனித நேயராக நமக்கு இனம்-காட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய காகித உறவு” என்னும் சிறு கதையைப் படிக்க நேர்ந்தபோதே அவரது படைப்புகளோடு எனக்கு இலக்கிய உறவு ஏற்பட்டு விட்டது.