பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


5

தாமோதரன் வீட்டில் ஊரே குடிபுகுந்திருந்தது. அவன் தங்கை விஜயாவையும், தமிழரசியின் அண்ணன் ராஜதுரையையும், ஒன்றுபடுத்துவதற்காகத் திரண்ட கூட்டம். அந்த ஊரின் வழக்கப்படியும், அவர்கள் ஜாதியின் மரபுப்படியும் தமிழரசியின் பங்காளிகள், அவள் வீட்டில் இருந்து ஊர்வலம் போல் புறப்பட்டு, இரவு எட்டு மணிக்கு தாமோதரன் வீட்டில் குவிந்தார்கள். தாமோதரன் குடும்பத்துப் பங்காளிகளும், அங்கே திரண்டு நிச்சயதாம்பூல வேலைகளைப் பங்காடிக் கொண்டிருந்தார்கள்.

இந்த இரு தரப்பாரும் குட்டாம்பட்டியில் மிகப் பெரிய குடும்பங்கள் என்பதால், ஊராரில் வசதியுள்ளவர்கள், முறைப்படி தங்களுக்கு சொல்லப்பட்டதோ இல்லையோ, ஏதோ ஒரு உறவு முறையைச் சொல்லிக் கொண்டு வந்துவிட்டார்கள். இன்ஸ்பெக்டர் வீடாயிற்றே! சும்மாவா? பொதுவாக நிச்சயதாம்பூல விழாவில், மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டுப் பெண்களும் கலந்து கொள்வதில்லை. ஆனால், தமிழரசி இந்த மரபை உடைத்து, தான் மட்டுமல்லாமல், தன்னோடு சித்தப்பா மகள் கலாவதியையும், இன்னும் சில 'சின்ன தாத்தா--பெரிய தாத்தா” பேத்திகளையும் இழுத்துக் கொண்டு, தாமோதரன் வீட்டுக்கு வந்துவிட்டாள். அதே சமயம், அந்த ஊரின் ஒருசில பெண் மரபுகளை இன்னும் மதிப்பது போல், கூட்டத்தோடு கூட்டமாக உட்காராமல், *மசோதா' நிலையில் இருக்கும் மணப்பெண் விஜயா இருந்த அறைக்குள், பங்காளிப் பெண்களோடு போய்விட்டாள். தாமோதரன் வெளியே உட்கார்ந்திருந்தான்.