பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

நெருப்புத் தடயங்கள்

கேட்டிருக்கே? இப்ப ஏன் அவன் எடுத்த சேலைன்னு நாணுறே? நல்ல நேரம் முடியறதுக்கு முன்னால கட்டுப்பா...’ என்றாள்.

புதுமையாக 'ப்பா’ போட்ட தமிழரசியை, எல்லாப் பெண்களும், ஆச்சரியமாகப் பார்த்தார்கள். விஜயாவோ, முகத்தை மூடிய கையை எடுக்கவில்லை. தமிழரசி அவளைத் துாக்க முயற்சி செய்து “எப்பாடி, என்ன கனம்" என்று சொல்லி விட்டு, மூச்சு விட்டாள்.

கலாவதி, "சேலைய கட்டத்தான் சொல்லுதாவ... அவிழ்க்க சொல்லுதது மாதிரி...இப்டி வெட்கப்படுறியோ அதுவும் இந்தக் காலத்துல? ஒரேயடியாய் வெட்கப் பட்டு, வெக்கம் முழுதையும் தீர்த்துட்டு. அப்புறம் புருஷன் முன்னால 'ஒன்னும் இல்லாம’ நிக்கப்படாது மயினி. கொஞ்சம் வெட்கத்தை வச்சுக்கணும். பேசாம சேலய கட்டு" என்றாள். அப்போதும் விஜயா மசியவில்லை. இயல்பிலேயே தன்னடக்கமானவள். விஜயாவை எப்படி புதுச் சேலைக்குள்’ கொண்டு வரலாம் என்ற யோசித்த போது, ஒரு குரல் பெரிதாக அதட்டலோடு ஒலிக்தது.

"இது என்ன தேசிங்கு ராசன் கல்யாணமா? மொகத்தை மூடுகிறாள்...ஒருவேளை மாப்பிள்ளை பிடிக்கலையோ என்னவோ...!’

எல்லோரும் குரல் வந்த திசையைப் பார்த்தார்கள்! முத்துமாரிப் பாட்டி! வாசல் படியில் தலைசாய்த்தபடி நின்றாள். எப்படி, யார் கூப்பிட்டு வந்தாள் என்று தெரிய வில்லை. எப்படியோ வந்து விட்டாள். பாட்டி போட்ட -பழியை கேட்டமாத்திரத்தில், விஜயா துள்ளி எழுந்தாள். நாணத்தை எங்கேயோ போட்டு விட்டு, பாட்டியை ஒரு மொறைப்பு மொறைத்தாள். தமிழரசியிடம் இருந்த புடவையை பலவந்தமாகப் பிடுங்கினாள்.