பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

நெருப்புத் தடயங்கள்

இதற்குள்----

பகவதியம்மாள் பாய்ந்து வந்தாள். ராஜதுரையின் இடுப்பைப் பிடித்து இழுத்தபடியே, பழைய காலத்து நாட்டுக் கட்டையான அவள், திமிறிய மகனை வலது கையால் அணை கொடுத்து, வராண்டா பக்கம் நிறுத்தி விட்டு, தனது தலையிலேயே இரண்டு தடவை அடித்துக் கொண்டாள். பிறகு, கலாவதியைப் பார்த்துத் தாவி, இரண்டடிக்கு முன்னால் நின்று கொண்டு, வார்த்தைகளைக் கொட்டினாள்.

“சண்டாளி... எத்தனை நாளு இந்தக் குடும்பத்தைக் கலைக்கணுமுன்னு நினைச்சியோ? நீ இப்போ நினைச்ச காரியம் முடிஞ்சுட்டுதுல்லா... இப்போ திருப்திதானடி ஒனக்கு...? இல்ல என் பிள்ளங்கள்ல யாராவது ஒண்ணு செத்தால்தான் திருப்தியா? வீட்ட ரெண்டாக்கப் பார்க்காதடி. அந்த அப்பாவிப் பொண்ணு பொன்மணி மனச மாத்துனது மாதிரி, நான் பெத்த பொண்ணோட மனசையும் மாத்திடாதடி. ஒனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு... ஒன் கொள்ளிக் கண்ணே வச்சு எங்கள எரிச்சுடாத டி ...”

கலாவதி, மோவாய்முனை நெஞ்சில் படும்படி, தலை குனிந்து நின்றாள். கண்களில் இருந்து நீர் சொட்டுச் சொட்டாகி மூக்கின் முனையில் திட்டுத் திட்டாகி, அவளை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. மாடக்கண்ணு ஒரு தடவை மகளைப் பார்த்துவிட்டு, பிறகு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தார். இன்னும் அவர்கள் அங்கே நகராமல் இருப்பதைப் பார்த்து விட்டு, பகவதியம்மாள் ஏதோ பேசப் போனாள். இதற்குள் ராஜதுரை நீ சும்மா இரும்மா’’ என்று சொல்லிவிட்டு, தங்கையிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புபவன் போல், வராண்டாவில் இருந்து, 'இறங்கிப்' பேசினான்.