பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244



"நெசவாளரைப் பட்டினி போடாதே"

"வேலை கொடு, அல்லது சோறு கொடு!"

மீண்டும் மீண்டும் அந்தக் கோஷங்கள் கும்மென்று எதிரொலித்து விம்பிப் பரந்தன; அவன் அந்த ஊர்வலத்தை ஆர்வத்தோடு பார்த்தான்; அவனது முகத்தில் தோன்றிய பசியின் ஜ்வாலை உள்ளடங்கிக் கும்பிக்கூட்டுக்குள் அடைபட்டுப் போனது போலிருந்தது. புழுதியும் புகையும் மண்டிய முகத்தில் தியரென்று ஒரு புத்தொளியின் ரேகை படருவது போல் இருந்தது.

'வேலைகொடு அல்லது சோறு கொடு!"

அந்தக் கோஷம் அவனது இதயத்திலே மோதி, வீணைத் தந்தியின் கமக நாதத்தைப்போல் ரீங்காரிக்கத் தொடங்கியது.

ஊர்வலம் நெருங்கிவந்துவிட்டது.

செந்நிறப் பதாகையைச் சுமந்து வந்த மனிதன் அவனைக்கடந்து அப்பால் சென்றுவிட்டான்; அவனுக்குப் பின்னால் பற்பல வாக்கியங்களைப் பொறித்த போர்டுகளையும் அட்டைகளையும் சுமந்துகொண்டு சாரிசாரியாக மனிதர்கள் வந்தார்கள்; மதுரை நகர் நெசவாளர் சங்கம்' என்று விலாசமிட்ட சிவப்புக்கொடி அந்த ஊர்வலத் தினரின் தலைக்குமீது பட்டொளி வீசிப் பறந்தது. குடிலிலிருந்து கலைக்கப்பட்ட எறும்புச்சாரைபோல் அந்த ஊர்வலம் முடிவே காணாமல் மேலும் மேலும் வந்து கொண்டிருந்தது. ஊர்வலத்தின் பிரவாக கதியை அணை கடந்து விடாதவாறு தடுத்து அணைப்பது போல், ஊர்வலத்தின் இரு மருங்கிலும் பல இளைஞர்கள் சைக்கிள்களில் அணி வகுத்து வந்தனர். அவர்கள் மீண்டும் மீண்டும் கோஷங்களிட்டார்கள்; அந்தக் கோஷ முழக்கம் ஊர் வலத்தின் அடி, முதல் நுனி வரையில் உத்வேகமும் உணர்ச்சியும் நிறைந்த மின்சார வேகத்தோடு பரவிச் சிலிர்த்து ஏகோபித்து விம்மியது.