பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

111


‘கதிரவன் தோன்றிவிட்டால், நாம் அந்தக் காக்கைகளை ஒன்றும் செய்யமுடியாது. இதுதான் நல்ல சமயம். இப்போதே நம் சேனைகளையெல்லாம் திரட்டிக்கொண்டு வாருங்கள். நம் பகைவர்களாகிய அந்தக் காகங்களை இந்த இருட்டு நேரத்திலேயே வளைத்து அடித்துக் கொன்று குவித்துவிட்டு வருவோம்’ என்றது.

உடனே அமைச்சுக் கோட்டான்கள், இது நமக்கு நல்ல வேளைதான். இப்போதே நாம் சென்று அந்தக் காக்கைகளை வென்று மீள்வோம்’ என்று சொல்லி உடனே விரைவாகப் படை கூட்டித் திரண்டன. எல்லாக் கோட்டான்களும், ஆலமரத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு, அங்கு கூடு கட்டி வாழ்ந்த காகங்களையெல்லாம், கொத்திக் கொன்று விட்டுத் தங்கள் அரசனிடம் திரும்பி வந்தன.

ஆலமரத்தில் இருந்த அந்தக் காகக் கூட்டம் பெரும்பாலும் அழிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆலமரம் முழுவதும் இரத்தம் வெள்ளம் போல் வழிந்தோடிக் கொண்டிருந்தது. காகங்கள் சின்னாபின்னமாகக் கிடந்தன. சிறகொடிந்த காக்கைகள் ஒருபுறம், காலொடிந்த காக்கைகள் ஒரு புறம், குடல் சரிந்து விழுந்து கிடந்த காக்கைகள் ஒரு புறம், இப்படி அந்த இடம் ஒரே பயங்கரமாகக் காட்சியளித்தது.

அந்தக் காக அரசன் எப்படியோ, கோட்டான்களின் கண்ணுக்குத் தப்பிப் பிழைத்துக் கொண்டது.