பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என் ஆசை

பஞ்ச தந்திரக் கதைகள் உலகப் புகழ்பெற்றவை. கதை என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு எடுத்துக்காட்டாக உள்ள நூல்களிலே ‘பஞ்ச தந்திரக் கதைகள்’ ஒன்றாகும். சிறந்ததுமாகும்.

கதை ஒரு கருத்தை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு, அது படித்தவுடன் நெஞ்சில் பசுமரத் தாணி போல் பதிவதாக இருக்க வேண்டும்; திரும்பத் திரும்பச் சொன்னாலும் புதுச் சுவை வழங்குவதாயிருக்க வேண்டும். சலிப்புத் தராத தன்மையும் அந்தக் கதைக்கு இருக்க வேண்டும் இந்தச் சிறப்புக்களெல்லாம் பஞ்ச தந்திரக் கதைகளில் அடங்கி யிருக்கின்றன.

தமிழில் பஞ்ச தந்திரக்கதைகள், எத்தனையோ பதிப்புகள் வெளிவந்து விட்டன. பாட்டு வடிவிலும், உரைநடையிலும் பலப் பல பதிப்புக்கள் பலப் பல நூலகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளன. இருந்தும், மீண்டுமொரு முறை வெளி வருவதென்றால், அதில் ஏதாவது புதுமை யிருக்க வேண்டும் என்று வாசகர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான். வாசகர்கள் ஏமாற வேண்டியதில்லை; இதில் நிறையப் புதுமை இருக்கிறது.

முதலாவதாக இதுவரை வெளிவந்துள்ள எந்தத் தமிழாக்கத்திலும் கையாளப்படாத மிக எளிமையான தமிழ் நடையை நான் கையாண்டிருக்கிறேன். பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்களும் படிக்கவேண்டும் என்ற கருத்தோடு, மிகமிக முயன்று எளிமையாக எழுதியிருக்கிறேன். எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல தமிழைக் கை விட்டு விடவில்லை. வேண்டாத சில கதைகளை விலக்கியுமிருக்கிறேன்.