பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான்கு நண்பர்கள்

77

வலையில் சிக்குகின்றன. குன்று போன்ற பெரிய யானையும், வெம்மையான தன் நஞ்சினால், எவரையும் கொல்லக் கூடிய பாம்பும், நெஞ்சின் நிலைதளர்ந்து தம்மைப் பிடிப்பவர்க்குக் கட்டுப்பட்டு விடு கின்றன. வானில் இருக்கும் பெரும் சுடர்களான கதிரவனும், நிலவும்கூட கிரகணப் பாம்பால் பீடிக்கப் படுகின்றன. அறிவில் மிக்க புலவர்களும் வறுமைக்கு ஆட்படுகின்றனர். அறிவில்லாத அற்பர்களின் கையிலே பெரும் பணம் போய்க் குவிகிறது. எல்லாம் அவரவர் நல்வினை தீவினைகளின் பயனேயாகும், இந்த வினையின் பயனை யாராலும் தள்ளமுடியாது.'

இவ்வாறு கூறிய அந்த எலி, தன் நண்பனான அரசப்புறாவையும் அதன் கூட்டத்தையும் சிக்க வைத்துக் கொண்டிருந்த அந்த வலையைத் தன் கூர்மையான பற்களால் அறுத்தெறிந்து அவற்றை விடுவித்தது. அரசப்புறாவும் அந்த எலியும் ஒன்றுடன் ஒன்று மிக அன்பாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தன. பின் எலியிடம் விடை பெற்றுக்கொண்டு புறாக்கள் பறந்து சென்றன.

அவை சென்றபின் அந்த எலி மீண்டும் தன் வளைக்குள்ளே போய் நுழைந்து கொண்டது.

புறாக்களைத் தொடர்ந்து பறந்து வந்த இலவமரத்துக் காகத்திற்கு அந்த எலியின் மீது அன்பு பிறந்தது. ஆகவே, அது கீழே இறங்கி வந்து, எலி வளையின் வாயிலில் மூக்கை வவத்து அந்த எலியைக் கூப்பிட்டது.