பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகவத புராணம் 215 விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளாகப் பிறந்து மலையத் துவஜன் என்ற மன்னனை மணம் செய்து கொண்டான். மலையத்துவஜன் மூப்பு எய்தியதும் தன் மூத்த பிள்ளையிடம் அரசைக் கொடுத்துவிட்டுக் காட்டுக்குச் சென்றான். செல்லும் பொழுது அவன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றான். தவத்தின் முடிவில் மலையத்துவஜன் இறந்துவிட அவன் மனைவியும் அத்துயரம் தாங்காது உயிர் துறக்க முற்பட்டாள். அப்பொழுது அவ்விடத்திற்கு வந்த பிராமணன், “பெண்ணே! நில், நீ யார்? இறந்து கிடக்கும் இவன் யார்? ஏன் உயிரை விட வேண்டும்?” என்று கேட்டவுடன் அப்பெண், “பிராமணரே! தாங்கள் யார் என்று தெரியவில்லை. என்னை ஏன் தடுக்கின்றீர்கள்?” என்று வினவ, உடனே அந்த பிராமணன், “பெண்ணே! என்னைத் தெரியவில்லையா? இப்போது பெண்ணாக இருக்கும் நீ போன ஜென்மத்தில் புரஞ்சனன் என்ற பாஞ்சால நாட்டு மன்னனாக இருந்தாய். உனக்கிருந்த ஒரே ஒரு நண்பன் நான்தான். இமயமலைச் சாரலில் ஒரு பெண்ணை மணந்து பாஞ்சால நாட்டை மறந்தாய். அப்பெண்ணை மணந்து நூறு வருடங்கள் அவளோடு வாழ்ந்தும், அவளை மறக்க முடியாமல் நரகத்தில் இடர்ப்பட்டு மறுபடியும் பெண் ஜென்மம் எடுத்தாய். இப்போது மலையத்துவஜனுடன் வாழ்ந்து மறுபடியும் தற்கொலைக்கு முயல்கிறாய். உன்னுடைய உண்மையான சொரூபத்தை நீ அறிந்து கொள்ளாததால்தான் இத்தனைக் கேடுகளும் கலக்கங்களும். நீ என்பது உன்னுடைய ஆன்மா, அதற்கு யாரும் உறவுமில்லை, பகையுமில்லை” என்று கூறினான். கதையைக் கேட்ட பிராசீனவர்கி அதன் தத்துவத்தைப் புரிந்து கொண்டு ஆத்ம சொரூபத்தை அறிந்து கொள்ளப் புறப்பட்டு விட்டான்.