பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710 பதினெண் புராணங்கள் ஐஸ்வர்யம் நிரம்பி இருந்தது. ஒர் அழகிய பொன்னால் ஆகிய சிம்மாசனத்தில் விஷ்ணு மந்தகாசப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். எங்கும் இன்பமயம். கருடனுடைய மனத்தில் ஒரு நெருடல். மூன்று உலகங்களையும் நிறைத்துக் கொண்டு நிற்கும் துயரம் துன்பம் எங்கே? இந்த விஷ்ணுலோகத்தில் காணப்படும் அமைதியும் இன்பமும் எங்கே? ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்த கருடன் விஷ்ணு எதிரே போய் நின்றான். கலக்கமுற்ற முகத்துடன் நிற்கும் கருடனைப் பார்த்து, விஷ்ணு, “கருடா! எப்படி இருக்கிறாய்? எல்லாம் நலம்தானா? உலகம் சுற்றிப் பார்க்கப் போனாயே, எங்கெங்கு சென்றிருந்தாய்?” என்று கேட்டார். கருடன் யமலோகத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டேன். என் மனத்தில் சில கேள்விகள் உள்ளன. அவற்றிற்குத் தங்களிடம் இருந்து விடை தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். ஏன் உயிர்கள் உலகில் பிறக்கின்றன? ஏன் இறக்கின்றன? உடம்போடு ஒட்டிய பொறிபுலன்கள் ஒருவர் இறந்த பிறகு என்ன ஆகின்றன? இறந்த பிறகு மனிதர்கள் எங்கே போகிறார்கள்? சிரார்த்த சடங்கு ஏன் செய்யப் படுகிறது? ஒருவன் உயிரோடு இருக்கும் பொழுது செய்த பாவ, புண்ணியங்கள் அவன் உடம்பு அழிந்த பிறகு என்ன ஆகின்றன? இறப்பு என்பது என்ன? - மேலே கண்டவற்றுள் சில கேள்விகளுக்கு விஷ்ணு விடை கூறினார். இறந்தவர்கள் எங்கே போகிறார்கள் என்ற வினாவிற்குப் பல்வேறு நரகங்களைப் பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறிய விஷ்ணு, அடுத்து விருஷ்டோசர்கா என்ற சடங்கைப் பற்றிக் கூறினார். அதை விளக்குவதற்குப் பின்வரும் கதையினைக் கூறினார்.