பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யிலோ அன்றிச் செதுக்கினவன் நல்ல எழுத்தறிவற்றவன் என்ற காரணத்தாலோ இக்குறை நேர்ந்திருக்கலாம் என எண்ணவும் முடியாது. தமிழ் நாட்டு வரலாற்றின் இடைக்காலத்திலே இத்தகைய மாற்றங்கள் மொழியில் மட்டுமன்றி வாழ்வு, பண்பாடு, நாகரிகம், சமுதாய நிலை இன்ன பிறவற்றிலும் உண்டாகியிருப்பதைக் காணமுடிகின்றமையின் இம்மாற்றமும் அவற்றை ஒட்டி வந்தது எனக் கொள்வதே பொருந்தமாகும். பிற மொழிச் சொற்களும் இதில் அதிகம் இடம் பெற்றிருப்பதைக் காண முடிகின்றது. ஏறக்குறைய இக்காலத்தில் எழுந்த உரைநடை நூல்களிலும் இத்தகைய வாடை வீசக் காணலாம். நாலாயிரப் பிரபந்தத்துக்குப் பேருரைகள் எமுந்த காலத்திலே வடமொழி அதில் அதிக இடம் பெற்றிருப்பதை நம்மால் காணமுடிகின்றது. அதை ‘ஈடு’ என்று நாம் போற்றிப் பாராட்டுகின்றோம். அந்த நடையையே மணியும் பவளமும் கலந்த நடை என்று பொருள்படும்படியான ‘மணிப்பிரவாள’ நடை என அழைக்கின்றாேம். அக்காலத்தில் அத்தகைய நடை எழுதுவதுதான் சிறந்தது என மக்களும் மன்னரும் கருதியிருக்கக்கூடும். தமிழ் உரைநடை வரலாற்றில் இது ஒரு திருப்பமேயாகும். எனினும், இந்த நடை அதிகமாக வழக்கத்தில் இல்லை. வைணவப் பெரு நூல்களுக்கு அமைந்த உரைகளிலும், கல்வெட்டுகளிலும் வேறுசில சமய வேதாந்த நூல்களிலும் இந்நடையைக் காணமுடிகின்றது. இந்த அமைப்பும் பத்தொன்பதாம் நூற்றண்டிலும் உள்ளதைப் பின்னர்க் காணலாம். அதற்குமுன் ‘மணிப்பிரவாள’ உரைநடைக்குச் சான்றாகவும்-ஈட்டுரையிலிருந்து இரண்டொரு பகுதிகள் இங்கே காணல் பொருத்தமானதாகும்.

தெய்வத் திருப்பாசுரமாகிய திருவாய் மொழிக்கு 'ஈடு’ உயர்ந்த உரையாக அமைகின்றது. என்றாலும் விளங்கிக் கொள்ள முடியாத-பிற உரைகளுக்குமாறுபட்ட-வகையில் மணிப்பிரவாள நடையில் அது அமைந்தகாரணத்தாலேயே நாட்டில் அவ்வளவு விளக்கம் பெறவில்லையோ என எண்ண வேண்டியுள்ளது. எனினும் நம் உரைநடை