100
26. தவறிய தவம்
'உலை மட்டு மெரிக்க வுள்ளே
னுலகில்நா' னெனவுன் னிற்றோ?
'இலைமட்டு மன்றி, நின்ற
எழிலெலா மெனைவிட் டேகத்
தலைமொட்டை யாகு மென்றே
தவித்ததோ?' 'தவத்தி னெலன்
நிலைமட்டுப் பட்ட' தென்றே
நினைத்ததோ? நெகிழ்ந்தன் றவ்வால்.
பேணத்தான் பெற்ற இந்தப்
பிறவியின் குறையைப் பேசி,
நாணத்தான் நகைத்த அந்த
நல்லியல் பில்லாப் புல்லைக்
காணத்தான் கூசிற் றேயோ?
கடுந்தவம் புரிந்து கைலை
பூணத்தான் புகுமோ? யாரே
புகுந்ததன் புலனைப் பார்ப்போர்!
வார்த்தைவா யில்வ ராதால்
வருத்தமா யிருக்க வைத்துப்
பார்த்ததும் பைய மேலும்
பரிவின்றிப் பகர்ந்த தப்புல்:
"வேர்த்துநீ வடிய வேண்டாம்;
விழுச்சுமை தாங்கும் கல்போல்
நேர்த்தியா யெதையும் தாங்கும்
நெஞ்சது வேண்டு மாலே!
வீதியில், வெளியில், வீட்டில்
விரும்பியே யிருந்து வாழும்,-
சாதியில் தாழ்ந்தோர், தாழாச்
சமர்த்தர்கள், சதுர ரான
வேதியர்,- விடியச் சென்று
வினைமேற்கொண் டெய்தும் காசாம்
ஊதிய மென்ப தேமற்
றுழைப்பினா லுறும்பே றன்றோ?