உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரிசு, வெள்ளியங்காட்டான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



2. புறக்கணிப்பு

புல்லையும், ஆலை யும்நூற்
பொருளாகக் கொண்டு, போற்றும்
முல்லையின் மணத்தில் மூழ்க்கி
முந்திரிச் சுவைதோய்த் தென்ன
நல்லதோர் காவி யத்தை
நயந்துநா னெழுதும் நேரம்,
தொல்லையா யென்முன் தோன்றித்
தொழலானாள், தோகை யல்லி!

"காவியம் வரைய' வல்லோன்
கவிதையில் காட்டக் கற்றாங்
கோவியம் வரைய வல்லோன்
உருவத்தில் காட்ட, வூடே
ஆவியும் பெற்றாங் குற்றிங்
காடவர் தமையாட் கொள்ளும்
தேவியே! குடிசை காணுன்
திருக்கோயி லிதுவன்" றென்றேன்.

"மாயனை, மஞ்சி னுாடே
மறைந்தவான் மதிய மன்ன
தூயனை, தோகை மார்தம்
துயில்தொலைத் தலைக்கும் தோலா
வாயனை வணங்கி, வாய்த்தேன்
வார்ந்திடி னார்ந்து செல்லும்
ஈயென வந்தே னுக்கிங்
கிடமில்லை யெனலா மோநீர்?

பலவின், நற் கதலி, மாவின்
பழங்களைப் பிழிந்த சாற்றில்
நலிவினைந் தீர்க்கு மாநெய்,
நறுந்தண்தே னளவாய்ப் பெய்து
நிலவினி லருந்த லொத்தென்
நெஞ்செலா மினிக்கச் செய்யும்
புலவ!நின் னடித்த லம்பூம்
பொழிலிது போது" மென்றாள்.