16
மானேயாய், முயலாய், மந்தி,
மாடாடு மயிலாய் வாழுங்
கானேயா யூரும், காமக்
கடுவாயாய்த் தானும்; கண்ட
தூனேயா யுடல்சு மக்கும்
ஊராள்வோன் பிள்ளை பொன்னன்.
தேனீயா யென்னைக் கொட்டித்
தீர்த்தனன், தெளியா தின்றே !
“மறியாது ? கொறிதான் யாது ?
மலையாது ? தொலையா தென்றர்ந்
தறியாத வயதில் நாமிங்
கனைவரு மலுப்பில் லாது,
குறியாத மகிழ்ச்சி கூடக்
கும்மாள மிட்டுக் கொண்ட
முறியாத நட்பை முற்றும்
முறித்தாய்நீ மாயா!” என்றன்.
“பனிப்போன பருவத் துற்ற
பாங்கான வேனி லன்ன
வனப்பான பருவம் வாய்த்த
வாலிப வாழ்வில், வையத்
தினிப்பான எண்ணம், செய்கை
யியல்பினுக் கிசைந்தி யங்கும்
தனிப்பான, - தவிர்க்காத் தன்மைத்
தளையவிழ்ந் திடுவ தன்றே?
‘இன்னன்மற் றிவ’னென் றென்னை
யிளமைதொட் டறிந்தி ருந்தும்,
“நன்னன்மற் றிளைத்தா” னென்ன
நடுநிலை, நயம்நா டாமல்,
உன்னின்மற் றுள்ள முதும்
உலையெரி யாக்கற் குன்கைப்
பொன்னும்பற் றிடிவே, போகாப்
பொருத்தமும் போயிற் றன்றே !